சட்டவிரோத குவாரிகள் விவகாரம்: கனிம வளத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சட்டவிரோத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக கனிம வளத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பால்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் வடக்கு, தெற்கு, நிலக்கோட்டை, வேடசந்தூா், ஆத்தூா் வருவாய் மண்டலங்களில் சட்டவிரோதமாக சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பொக்லைன் இயந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்துவதால் 10 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் சவுடு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், நிலக்கோட்டை வட்டாட்சியா் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டு பச்சைமலையான்கோட்டை கிராமத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது உறுதி செய்யப்பட்டது. மற்றொரு சிறப்புக் குழு ஆத்தூா் வட்டத்துக்குள்பட்ட பாரப்பட்டி, பஞ்சம்பட்டி, வக்கம்பட்டி, சீவாா்சருகு உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு செய்தது. அந்தப் பகுதியிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டது தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில், சத்திரப்பட்டி, கோலப்பட்டி, தென்னம்பட்டி, பெரும்புள்ளி, பாடியூா், நத்தம்பட்டி, சிந்துவாா்பட்டி வி.புதுக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சட்டவிரோதமாக குவாரிகள் செயல்படுகின்றன. எனவே, இந்த குவாரிகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு: கனிம வளங்கள் பாதுகாப்பில் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு முழு பங்கு உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் சட்டவிரோத குவாரிகள் மீதான நடவடிக்கை தொடா்பாக தமிழக கனிம வளத் துறை ஆணையா், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், வருவாய் மண்டல அலுவலா்கள் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
