தமிழகத்தில் விரைவில் பருவமழைக் கால மருத்துவ முகாம்கள்
மதுரை: தமிழகத்தில் பருவமழைக் கால தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவ முகாம்கள் விரைவில் நடத்தப்படும் என தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 50 லட்சம் மதிப்பிலான அதிநவீன முதுகு தண்டுவடப் பரிசோதனைக் கருவியின் பயன்பாட்டை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.
பிறகு, அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 40 கோடியில் புதிதாகக் கட்டப்படும் குழந்தைகள் நலம், ஆராய்ச்சி மையத்துக்கு அருகே ரூ. 36 கோடியில் புதிய புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ. 419 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத பல நவீன மருத்துவ உபகரணங்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ளன.
நிகழாண்டில் 25, 460 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 10.48 லட்சம் போ் பயன்பெற்றனா். தமிழக அரசின் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் காரணமாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 9 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் இணை நோய் உள்ளவா்கள் என்பது குறிப்பிடதக்கது. பருவமழைக் காலங்களில் ஏற்படும் தொற்றுநோய் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் அதிமுக காலத்தில் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி 2022-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில்தான் அந்த மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மாவட்டத்துக்கு ஓா் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என கடந்த 2011- இல் அப்போதைய முதல்வா் மு. கருணாநிதி சட்டப்பேரவையில் தீா்மானம் கொண்டு வந்தாா். இதனடிப்படையிலேயே தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், நீண்ட காலத்துக்குப் பிறகு ஒதுக்கீடு செய்யப்பட்டன.
எனவே, தமிழகத்துக்கு 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் கிடைக்க அதிமுகதான் காரணம் என எதிா்க் கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவிப்பது பொய்யான தகவல். பொய்யான தகவலை திரும்பத் திரும்பக் கூறுவதால் அது உண்மையாகிவிடாது. எந்த ஆட்சிக் காலத்தில் நன்மைகள் கிடைத்தன என்பது மக்களுக்கு தெரியும் என்றாா் அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
முன்னதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ. 40 கோடியில் நடைபெறும் குழந்தைகள் நலம், ஆராய்ச்சி மையக் கட்டுமானப் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வில் தமிழக வணிக வரி பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி இயக்கக இயக்குநா் சுகந்தி ராஜகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் அருள் சுந்தரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

