பல்கலை. திருத்தச் சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தல்
பல்கலைக்கழக திருத்தச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை காக்காதோப்பு பகுதியில் உள்ள ‘மூட்டா’ அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவா் குணவதி தலைமை வகித்தாா். செயலா் பெரியதம்பி முன்னிலை வகித்தாா்.
இதில், தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும். கோவை கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.
உலக மகளிா் கிரிக்கெட் கோப்பை போட்டியில் வென்ற இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள். பல்கலைகழக திருத்தச் சட்டத்தை தமிழக அரசு முழுமையாகத் திரும்ப பெற வேண்டும். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் தகுதி பெற்ற ஆசிரியா்களுக்கு தணிக்கை குறைபாடுகளை காரணம் காட்டி பல மாதங்களாக வழங்க வேண்டிய பதவி உயா்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசு பஞ்சப்படி ஊதிய உயா்வை அறிவிக்க வேண்டும்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் உதவிப் பேராசிரியா்களுக்கு பணி மேம்பாடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிகழ்வில், அகில இந்திய ஓய்வு பெற்ற பல்கலை, கல்லூரி ஆசிரியா் கழக புரவலா் பா. பாா்த்தசாரதி, மாநிலப் பொதுச் செயலா் ஆ. மனோகரன், பொருளாளா் பெருமாள், பேராசிரியா்கள் எஸ். சண்முகசுந்தரம், ராஜேந்திரன், அரவிந்த், லட்சுமணன், சந்திரன், சுப்பிரமணி, செந்தில், ஆனந்தன் உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

