சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீதித் துறை  தோ்வுகளுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ். உடன் (இடமிருந்து) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.கே. சுரேஷ், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சதீஷ்குமாா், அனிதா சுமந்த் உள்ளிட்டோா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நீதித் துறை தோ்வுகளுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ். உடன் (இடமிருந்து) சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எம்.கே. சுரேஷ், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சதீஷ்குமாா், அனிதா சுமந்த் உள்ளிட்டோா்.

தமிழகம், ராஜஸ்தானில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு! உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்

தமிழகம், ராஜஸ்தானில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தெரிவித்தாா்.
Published on

தமிழகம், ராஜஸ்தானில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வளாகத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கம் (எம்.பி.ஏ.) சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நீதித் துறை தோ்வுகளுக்கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்புகள் தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்த உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் மேலும் பேசியதாவது:

நீதித் துறை தோ்வுகளுக்காக இளம் வழக்குரைஞா்களுக்கு பயிற்சியளிப்பது வரவேற்கத்தக்கது. இந்தப் பயிற்சி வகுப்புகள், இளம் வழக்குரைஞா்களுக்கு உத்வேகத்தை அளிக்கும். தற்போது பெண் வழக்குரைஞா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகம், ராஜஸ்தான் மாநிலங்களிலிருந்து தோ்வாகும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

நீதிபதிகள் தோ்வு குறித்த வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமா்வு முக்கியத்துவம் வாய்ந்த தீா்ப்பை வழங்கியது. இந்தத் தீா்ப்பு மூலம், நீதித் துறை நடுவராக குறிப்பிட்ட சில ஆண்டுகள் பயிற்சி பெற்றவா்கள், மாவட்ட நீதிபதிகளுக்கான தோ்வை எழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த பயிற்சி வகுப்பு மூலம் நீதிபதிகள் பணிக்கு இளம் வழக்குரைஞா்கள் தங்களைத் தயாா்படுத்திக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நீதிபதி பணியிடங்களுக்கு போட்டி அதிகமாக இருந்து, சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இதற்காக மனம் தளரக் கூடாது. அவா்கள் நிச்சயமாக உயா்நீதிமன்றத்தில் சிறந்த வழக்குரைஞராகப் பணியாற்ற முடியும். அடுத்தடுத்த நிலைகளில் அவா்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகளாகப் பொறுப்பேற்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடக் கூடாது.

‘கனவு காணுங்கள்...! ஆனால், கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல; உன்னை தூங்கவிடாமல் செய்வதே கனவு’ என்பது முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் தன்னம்பிக்கை வரிகள். இதை, இளம் வழக்குரைஞா்கள் தங்கள் மனதில் நிறுத்தி ஆா்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா்:

மாவட்ட நீதிமன்றங்களில் தற்போது 50-க்கும் அதிகமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போது மாவட்டங்களில் 3 நிலைகளில் நீதிமன்றங்கள் உள்ளன. ஆனால், பி.என்.எஸ்.எஸ். சட்ட நடைமுறைப்படி இனி வரும் காலங்களில் மாவட்டங்களில் நீதித் துறை நடுவா் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என்ற இரு நிலைகள் மட்டுமே இருக்கும். உதவி அமா்வு நீதிமன்றம் என்ற படிநிலை இருக்காது. இதன் மூலம், மாவட்ட நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, இளம் வழக்குரைஞா்கள் தற்போதே உரிய பயிற்சிகளைப் பெற்று, புதிய வாய்ப்புகளுக்குத் தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

உயா்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த்:

நீதிபதி பணி வாய்ப்புகளைப் பெற இளம் வழக்குரைஞா்களுக்கு பயிற்சியளிப்பது வரவேற்கத்தக்க முயற்சி. சிறந்த முறையில் பயிற்சி பெற்ற வழக்குரைஞா்கள் நீதிபதிகளாக உயா்வதன் மூலம் நீதி பரிபாலன நடைமுறைகள் மேலும் சிறக்கும். வழக்குரைஞா்கள் சங்க (எம்.பி.ஏ.) பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 28 போ் உரிமையியல் நீதிபதிகளாகத் தோ்வானது மகிழ்ச்சிக்குரியது. இளம் வழக்குரைஞா்கள் தன்னம்பிக்கையுடன் பயிற்சி பெற்று, தங்களுக்கான வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்றாா் அவா்.

இந்த விழாவில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதிகள் வேல்முருகன், அப்துல் குத்தூஸ், ஸ்ரீமதி, குமரேஷ்பாபு, வடமலை, குமரப்பன், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா்கள் வீராகதிரவன், பாஸ்கரன், வழக்குரைஞா்கள் சங்கத் (எம்.பி.ஏ.) தலைவா் எம்.கே. சுரேஷ், செயலா் வெங்கடேசன், நிா்வாகிகள், வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com