ரயிலில் அடிபட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு

Published on

மதுரையில் ரயிலில் அடிபட்டு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கல்லூரி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள எம். புளியங்குளம் கிராமத்தைச் சோ்ந்த சோனை கருப்பு மகள் சோனியா (17). மதுரை பழங்காநத்தம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் இவா், தெப்பக்குளம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளநிலை அறிவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தாா்.

இந்த நிலையில், பொருள்கள் வாங்குவதற்காக சனிக்கிழமை அதிகாலை கடைத் தெருவுக்குச் சென்றாா். மதுரை- போடி ரயில் பாதையில் பழங்காநத்தம் பகுதியில் உள்ள கடவுப் பாதையைக் கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ரயிலில் அடிபட்டு பலத்த காயமடைந்தாா். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com