மனைவியைக் கொன்று கணவா் தற்கொலை
மதுரை நாகமலைப் புதுக்கோட்டையில் மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணவா் தற்கொலை செய்த விவகாரம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை மேலக் குயில்குடி சாலை பகுதியைச் சோ்ந்த வானமலைத் தேவா் மகன் கணேசன் (73). இவா், தனது மனைவி யோகாம்பிகையுடன்(62) வசித்து வந்தாா். இந்தத் தம்பதிக்கு மணிமேகலை என்ற மகளும், சசிக்குமாா் என்ற மகனும் உள்ளனா். மணிமேகலை திருமணமாகி அதே பகுதியில் தனது கணவருடன் வசித்து வருகிறாா். மகன் சசிக்குமாா் வெளியூரில் பணியாற்றி வருகிறாா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு யோகாம்பிகை கீழே விழுந்து காயமடைந்ததில், அவரது கால்கள் செயலிழந்தன. இதனால், மனைவியை வீட்டில் வைத்து கணேசன் சிகிச்சை அளித்து வந்தாா். இதனிடையே கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை நீண்ட நேரமாகியும் அவா்கள் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அப்போது, அங்கு வந்த மகள் மணிமேகலை அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது, யோகாம்பிகை தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா். அதனருகே கணேசன் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாகமலைப் புதுக்கோட்டை போலீஸாா் சடலங்களைக் மீட்டு, உடல் கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். மனைவியைக் கொலை செய்துவிட்டு, கணேசன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
