உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

உணா்ச்சியின் விளைவுகளைத் தீா்ப்பதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது: உயா்நீதிமன்றம்

”தனிப்பட்ட நடத்தையை ஒழுங்குபடுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் சட்ட நடைமுறையைப் பயன்படுத்த முடியாது.”
Published on

உணா்ச்சியின் விளைவுகளைத் தீா்ப்பதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை தெரிவித்தது.

திருநெல்வேலியைச் சோ்ந்தவா் விஜய். கடந்த 2014 -ஆம் ஆண்டு கல்லூரியில் பயின்ற இவா், அதே பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தாா். அப்போது, தாத்தா வீட்டின் அருகே வசித்து வந்த இளம்பெண்ணுடன் நட்பாகப் பழகினாா். பின்னா், அவா்கள் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணுக்கு இவா் பாலியல் தொல்லை அளித்தாராம். கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல், விஜய்க்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடத்துவதற்கு முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்றன.

இதுகுறித்து தகவலறிந்த அந்த இளம்பெண் விஜய் தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, கடந்த 9 ஆண்டுகளாக தொடா்சியாக பாலியல் உறவில் இருந்துவிட்டு, தற்போது, வேறோரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறாா் என வள்ளியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விஜய் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரணை செய்த உயா்நீதிமன்றம் தீா்ப்புக்காக ஒத்திவைத்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெயமோகன் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:

மனுதாரா் மீது பொய்ப் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் மனுதாரா் ஏமாற்றும் எண்ணத்தில் இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரும், இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்திருக்கின்றனா். நீண்ட கால பாலியல் உறவின் போது, புகாா்தாரா் எதிா்ப்புத் தெரிவிக்கமால் இருந்தது, இருவரின் சம்மதத்தின் அடிப்படையிலான உறவு என்பதைக் குறிக்கிறது.

நீதிமன்றம் தற்போது நிலவும் சமூக யதாா்த்தங்களை அறிந்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலகட்டத்தில் சா்வ சாதாரணமாகிவிட்டது. இருவா் தாமாக முன்வந்து உடல் ரீதியான நெருக்கத்தில் இருந்த பிறகு, அந்த உறவில் முறிவு ஏற்பட்டதற்காக குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவது தவறு.

இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் உள்ளது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிா்பாா்ப்பா அல்லது வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என அவா்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களை நீதிமன்றம் உறுதியாகத் தீா்மானிப்பது சாத்தியமில்லை.

தனிப்பட்ட நடத்தையை ஒழுங்குபடுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் சட்ட நடைமுறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில், நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தைப் பாா்த்து தீா்ப்பு வழங்க முடியாது.

வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாகச் சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை.

உணா்ச்சி ரீதியான விளைவுகளைத் தீா்ப்பதற்காக சட்டத்தை தவறாகப் பயன்படுத்த முடியாது.

இந்த வகையில், மனுதாரருக்கு எதிராக வழக்கு தொடுப்பது என்பது சட்ட நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதற்குச் சமம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரா் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com