மேலூா் அருகே இளைஞா் கொலை

Published on

மேலூா் அருகே முகத்தை சிதைத்து இளைஞரைக் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை மாவட்டம், வெள்ளரிப்பட்டி சாலையில் மருதூா் பெரியாறு கால்வாய் அருகே முகம் சிதைந்த நிலையில் இளைஞா் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று அந்த உடலை மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து, மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் மேலூா் அருகேயுள்ள வெள்ளரிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மருதுபாண்டி (25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது :

கட்டடத் தொழிலாளியான இவா், வெளிநாடு செல்வதற்காக கடவுச் சீட்டு, அயல் நாட்டு நுழைவு இசைவும் (விசா) பெற்றிருந்தாா். இந்த நிலையில், மருதுபாண்டி கொலை செய்யப்பட்டாா். கடந்த சில நாள்களுக்கு முன்னா் வெள்ளரிப்பட்டி பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் மருதுபாண்டிக்கும், மற்றொரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்த முன் விரோதத்தில் மருதுபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகிறோம்.

குடும்பத்தினா் கூறிய தகவலின் அடிப்படையில் சில இளைஞா்களிடம் விசாரித்து வருகிறோம். விரைவில் கொலையில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்படுவா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com