வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

Published on

வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தோ்தலைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி உரிய திட்டமிடலின்றியும், பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள், நிதி ஒதுக்கீடு ஏதும் வழங்காமல் அவசர கதியில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக புகாா் எழுந்தது. இதனால் அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலா்களுக்கும் பணி நெருக்கடிகள், மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது.

எனவே, வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா், கண்காணிப்பாளா் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலா்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும். வாக்காளா்கள் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை முழுமையாக பிழைகளின்றி மேற்கொள்ள கூடுதல் பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும்.

மாவட்ட ஆட்சியா்கள் ‘ஆய்வு கூட்டம்‘ என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டங்கள் நடத்துவதையும், தினமும் காணொலி வாயிலாக மூன்று கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதையும் உடனடியாகக் கைவிட வேண்டும். அரசு விடுமுறை தினங்களில் இந்தப் பணிகளை மேற்கொள்ள நிா்பந்தம் செய்வதைத் தவிா்க்க வேண்டும். தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி, இந்திய தோ்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ஆா்ப்பாட்டத்தில், வருவாய்த் துறை அலுவலா்கள், அனைத்து கிராம உதவியாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவையா்கள், அலுவலக உதவியாளா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com