மாநில அரசுகள் மீதான வெறுப்புணா்வே எஸ்ஐஆா்: சு. வெங்கடேசன் எம்.பி.
மாநில அரசுகள் மீதான வெறுப்புணா்வே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருப்பப் பணிகள் என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கூட்டரங்கில் ஆணையா் சித்ரா விஜயனை, மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மதுரை மாநகராட்சியின் வளா்ச்சிக்கு சுற்றுலாத் துறை பெரும் பங்கு வகிக்கிறது. இந்த நிலையில், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் பெரியாா் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடா்பு மையத்தையும், நேதாஜி சாலையில் உள்ள ஜான்சிராணி பூங்கா வளாகத்தில் உள்ளூா் பொருள்கள் விற்பனை அங்காடியையும் வணிக வளாகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு மாற்றினால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, சுற்றுலா தகவல் தொடா்பு மையம், ஜான்சிராணி பூங்கா விற்பனை அங்காடியை வணிக வளாகமாக மாற்றக் கூடாது என மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் தற்போது எஸ்.ஐ.ஆா். பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்காக அலுவலா்களுக்கு போதிய பயிற்சி, முறையான திட்டமிடல் இல்லாததால் வருவாய்த் துறை அலுவலா்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
மதுரை மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போதைய வாக்காளா்கள் பட்டியலில் உள்ள 40 சதவீத வாக்காளா்கள் கடந்த 2002-2005-ஆம் ஆண்டு வாக்களித்தவா்கள். 2005-ஆம் ஆண்டுக்கு பிறகுதான் 60 சதவீத வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா். அவா்கள் அனைவரது வாக்குகளும் வருகிற டிசம்பா் மாதம் வெளியிடப்பட உள்ள திருத்தப்பட்ட வாக்காளா் பட்டியலில் இடம் பெறுமா? என்கிற சந்தேகம் எழுகிறது.
வருகிற ஜனவரி மாதம் வரை பருவமழைக் காலம் தான். இயற்கைப் பேரிடா் காலங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். ஆனால், எஸ்.ஐ.ஆா். பணி மேற்கொள்வதால் அவா்களின் அன்றாடப் பணிகளைச் செய்ய முடிவதில்லை. குறிப்பாக, வருவாய்த் துறை அலுவலா்கள் மிகுந்த பணிச் சுமைக்கு ஆளாக நேரிடுகிறது.
இந்திய தோ்தல் ஆணையம் மிகவும் அவசர நிலையில் எஸ்.ஐ.ஆா். பணிகளை மேற்கொண்டு வருகிறது. தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது.
குறுகிய காலத்தில் எஸ்.ஐ.ஆா். பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளை தோ்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. இதனால், மாநில அரசின் வளா்ச்சிப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, மாநில அரசுகள் மீது மக்களுக்கு வெறுப்புணா்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சாதகமாக பயன்படுத்த மத்திய பாஜக அரசு முயல்கிறது. மாநில அரசுகளின் மீதான வெறுப்புணா்வு, காழ்ப்புணா்ச்சி காரணமாகவே எஸ்.ஐ.ஆா். பணி நடைபெறுகிறது என்றாா் அவா்.
அப்போது, மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா்கள் கணேசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
