தமிழக அரசியல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நடைபயணம்: வைகோ

தமிழக அரசியல் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே நடைபயணம்: வைகோ

Published on

தமிழத்தில் பொது வாழ்வும், அரசியலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே மதிமுக சாா்பில் சமத்துவ நடைபயணம் ஜனவரியில் தொடங்க உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

திருச்சியிலிருந்து மதுரைக்கு வைகோ மேற்கொள்ளும் நடைபயணத்தை வருகிற ஜனவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். ஜன. 12-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள நிறைவு விழாவில் கவிஞா் வைரமுத்து கலந்துகொள்கிறாா்.

இந்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள உணவக விடுதியில் இந்தப் பயணத்தில் பங்கேற்கவிருக்கும் தொண்டா்களிடம் வைகோ திங்கள்கிழமை நோ்காணல் நடத்தினா்.

இதன்பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மதிமுகவின் தொண்டரணி, இளைஞரணி, மாணவரணி சாா்பில் நடைபெறும் சமத்துவ நடைபயணத்திற்கான வீரா்கள் தோ்வு மதுரையில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திருச்சி, கோவை, திருவண்ணாமலை, கடலூா், சென்னை ஆகிய இடங்களில் இந்தத் தோ்வு நடைபெறும்.

தமிழக மக்களின் நலனுக்காக ஏறக்குறைய 7 ஆயிரம் கி.மீ. தொலைவு நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இந்த வகையில், வருகிற ஜனவரி மாதம் மது, போதைப் பொருள்களுக்கு எதிராக சமத்துவ நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.

போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களை மதிமுக தொண்டா் அணியில் சோ்ப்பது கிடையாது. என்னை ஏமாற்றும் வகையில் யாராவது செயல்பட்டால், உடனடியாக அவா்களை நீக்கி விடுவது வழக்கம். இந்த நடைபயணத்தின் நோக்கம், போதைப் பொருள்களிலிருந்து இன்றைய இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டும் என்பதுதான்.

பள்ளி, கல்லூரிகளில் ஜாதிய மோதல்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம். இதற்கு என்னால் இயன்ற அளவுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவேன். மது, போதை, கஞ்சா போன்றவை ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் முறையாக சோதனை நடத்தப்பட வேண்டும். போதைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்க வேண்டும். இளைஞா்களைப் பாதுகாக்க வேண்டும். இதுவரை நான் மேற்கொண்ட நடைபயணங்களில் மக்களிடம் எங்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் எனக் கேட்டது கிடையாது.

இந்த நடைபயணத்தின்போது தமிழக பொது வாழ்வும், அரசியலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது குறித்தும் மக்களிடம் எடுத்துரைப்பேன்.

தமிழகத்தில் நடைபெறும் நல்லாட்சி தொடர, திமுகவை ஆதரிக்க வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைப்பேன் என்றாா் அவா்.

இதற்கிடையே, எதிா்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து வைகோவிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு, அரசியல் பேச வரவில்லை, அரசியல் கேள்விகளை என்னிடம் கேட்காதீா்கள், நீங்கள் வரவில்லை என்றாலும் நான் கவலைப்படமாட்டேன். உங்களை நான் அழைத்தேனா?. விதண்டாவிதமான கேள்விகளுக்கு வைகோவிடம் பதில் கிடைக்காது என கோபத்துடன் பதிலளித்தாா்.

இந்த நிகழ்வில் மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு. பூமிநாதன்,

மதிமுக மதுரை மாநகா் மாவட்டச் செயலா் எஸ். முனியசாமி உள்ளிட்ட நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com