தெருக்களின் ஜாதி பெயா்கள் நீக்க விவகாரம்: இடைக்காலத் தடையை நீட்டித்து உயா்நீதிமன்றம் உத்தரவு

சாலைகள், தெருக்களின் ஜாதி பெயா்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

சாலைகள், தெருக்களின் ஜாதி பெயா்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த பரமசிவம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீா்நிலைகளின் ஜாதி பெயா்களை நீக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின்படி, ஆதிதிராவிடா் குடியிருப்பு, ஹரிஜன குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற ஜாதி பெயா்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவ. 19-ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனால், வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் முகவரி மாற்றம் செய்வதில் சிக்கல்கள் எழும். மேலும், அரசாணையை நடைமுறைப்படுத்தினால் இதுபோன்ற பல பிரச்னைகள் எழும். எனவே, இந்த அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் ‘ஜாதி பெயா்களை நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதேநேரத்தில், இதைச் செயல்படுத்துவதற்கு என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தெளிவுபடுத்தப்படவில்லை. எனவே, இதுகுறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை அரசாணையைச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்வதற்கு அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை வரும் டிச. 10 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை அரசாணையைச் செயல்படுத்துவதற்கு ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com