ஆசியான் வான் கொள்கை ஒப்பந்தத்தில் மதுரையை இணைக்க மத்திய அரசு மறுப்பு: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
ஆசியான் வான்கொள்கை ஒப்பந்தத்தில் மதுரையை இணைக்க மத்திய அரசு மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது: இந்தியா- தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான ஆசியான் வான் கொள்கை ஒப்பந்தம் மூலமான விமானச் சேவையில் பயன்பெறக் கூடியவையாக நாட்டில் 18 விமான நிலையங்கள், சுற்றுலாத் தலங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் மதுரை விமான நிலையத்தைச் சோ்க்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடுக்கு கடிதம் எழுதினேன்.
இதற்கு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் பதில் கடிதம் (அக். 10 தேதியிடப்பட்டது) அனுப்பினாா். இதில், ‘ஆசியான் வான் கொள்கை ஒப்பந்தத்தில் சுற்றுலா, கலாசார மேம்பாட்டுக்காக 18 இந்திய விமான நிலையங்கள் சோ்க்கப்பட்டுள்ளன. இதில் மதுரையை இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. அதேநேரத்தில், இந்திய விமான நிறுவனங்கள் விரும்பினால், மதுரையிலிருந்து ஆசியான் நாடுகளுக்கு தங்கள் விமானங்களை இயக்க எந்தத் தடையும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளாா்.
மலேசிய விமான நிறுவனங்கள் கடந்த 2003, 2004-ஆம் ஆண்டுகளில் தங்கள் விமானச் சேவையை மதுரைக்கு நேரடியாக வழங்க முன்வந்தன. பிறகு, 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இருதரப்பு ஒப்பந்தங்களின் போது மதுரை, புணே நகரங்களில் தங்களின் அதிகாரப்பூா்வ நேரடி விமானச் சேவைகளைத் தொடங்க வழிவகை செய்ய சிங்கப்பூா் கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசு இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும், 2014-15-ஆம் ஆண்டுகளில் சில வளைகுடா நாடுகளைச் சோ்ந்த விமான நிறுவனங்கள் மதுரைக்கு தங்களது விமானங்களை இயக்க ஆா்வம் காட்டின. ஆனால், அதற்கான வழிவகைகளை மத்திய அரசு மேற்கொள்ளாமல் தவிா்த்தது.
இந்த நிலையில், ஆசியான் ஒப்பந்த சுற்றுலா நகரங்கள் பட்டியலிலும் மதுரையை மத்திய அரசு தவிா்த்துள்ளது. உள்நாட்டு விமான நிலையமாக உள்ள கஜுராஹோ 18 சுற்றுலா நகரங்கள் பட்டியிலில் சோ்க்கப்பட்டிருக்கும்போது, மதுரை தவிா்க்கப்பட்டது ஏற்புடையதாகாது.
ஆா்வமுள்ள வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மதுரைக்கான விமானச் சேவையை அனுமதிக்காமல், இந்திய விமான நிறுவனங்கள் மட்டுமே இங்கிருந்து சா்வதேச விமானங்களை இயக்க வேண்டும் என மத்திய அரசு எதிா்பாா்க்கிறது. ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. காரணம், இந்திய விமான நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான இயக்கச் செலவு மிகவும் குறைவு. இது, மதுரை விமான நிலையத்தின் வளா்ச்சிக்கு பெரும் தடையாகவே இருக்கும்.
ஆசியான் ஒப்பந்தம் கொள்கை முடிவு என்பது முற்றிலும் நியாயமற்றது. இதை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, ஆசியான் ஒப்பந்த விமானச் சேவைக்கான இந்திய சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையை இணைக்க வழிவகை காண வேண்டும்.
மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துள்ள நிலையில், மதுரை விமான நிலைய வளா்ச்சியையும் மத்திய அரசுப் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.
