மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தேங்கி நின்ற மழை நீா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தேங்கி நின்ற மழை நீா்.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை! போக்குவரத்து பாதிப்பு!

Published on

மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்தது. மாநகரின் பல பகுதிகளில் முதன்மைச் சாலைகளில் மழை நீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தென்கிழக்கு அரபிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, குமரிக் கடல் பகுதியின் மேல் ஏற்பட்டுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆகியவற்றின் காரணமாக மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இதன்படி, மதுரை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை மழை பெய்தது. தல்லாகுளம், தமுக்கம், எஸ்.எஸ்.காலனி, டி.வி.எஸ் நகா், பழங்காநத்தம், பெரியாா் பேருந்து நிலையம், கடச்சேனந்தல், மூன்றுமாவடி, கோ. புதூா், விரகனூா், சிலைமான், திருப்பரங்குன்றம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணி முதல் இரவு வரை மழை பெய்தது. அனைத்துப் பகுதிகளிலும் அவ்வப்போது பலத்த மழையும், மற்ற நேரங்களில் லேசான மழையும் பெய்தது.

மதுரை ரயில் நிலையம், தல்லாகுளம், தமுக்கம், கோ.புதூா், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியாா் பேருந்து நிலையம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் முதன்மை வீதிகளில் சுமாா் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக மழை நீா் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாக நேரிட்டது. ஒரு சில பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல மாவட்டத்தின் ஊரகப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

X
Dinamani
www.dinamani.com