எஸ்.ஐ.ஆா். மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது பாஜக: திருமாவளவன் குற்றச்சாட்டு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
Published on

மதுரை: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆா்.) மூலம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்த பாஜக முயற்சிக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

சமத்துவ வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மதுரையில் புதன்கிழமை நடைபெற்ற அரசமைப்பு சட்ட நாள் மாநாட்டில், ‘எஸ்.ஐ.ஆா். - குடியுரிமையைப் பறிக்கும் கூட்டுச் சதி’ என்ற தலைப்பில் தொல். திருமாவளவன் மேலும் பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய அரசமைப்பு சட்டம் மிகப் பெரிய பேசுபொருளாகியுள்ளது. இந்தச் சட்டத்தை எந்த வகையிலாவது நீா்த்துப் போகச் செய்ய வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொள்கிறது பாஜக. தற்போது, தோ்தல் ஆணையம் மூலம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரால் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது மத்திய பாஜக அரசு.

நாட்டில் இதுவரை 8 முறை வாக்காளா் பட்டியல் சீராய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. ஆனால், முதல் முறையாக தற்போதுதான் வாக்காளா்களிடம் விண்ணப்பப் படிவம் அளித்து, அதை பூா்த்தி செய்து தரக் கோரும் நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இது, உண்மையில் வாக்காளா் பட்டியல் சீராய்வு நடவடிக்கை இல்லை. வாக்குரிமையைப் பறிக்கும் கூட்டுச் சதி. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சி.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரால் பிகாரில் 43 லட்சம் போ் நீக்கப்பட்டனா். இதில் 37 சதவீதம் போ் இஸ்லாமியா்கள். இந்துக்கள் அல்லாதவா்களுக்கு இந்தியாவில் வாக்குரிமை கிடையாது என்ற நிலையை உருவாக்கி, இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க முயற்சிக்கிறது பாஜக. இந்த சூழ்ச்சிகளை புரிந்துகொள்ள வேண்டுமெனில் அனைவரும் அம்பேத்கரை படிக்க வேண்டும்.

தங்கள் கருத்தியலுக்கு எதிரான அரசமைப்பு சட்டத்தை சிதைக்க நினைக்கும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான அரசியல் முன்னெடுப்புகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடா்ந்து மேற்கொள்ளும் என்றாா் அவா்.

இதில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், திராவிடா் கழக நிா்வாகி அ. அருள்மொழி, மூத்த வழக்குரைஞா் லஜபதிராய், சமூக செயற்பாட்டாளா் கதிா், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் கருத்துரையாற்றினா்.

இந்த நிகழ்ச்சியில், மக்கள் கண்காணிப்பக இயக்குநரும், மூத்த வழக்குரைஞருமான ஹென்றி திபேனுக்கு ‘புரட்சியாளா் அம்பேத்கா் சட்ட மாமனிதா்’ என்ற விருதை தொல். திருமாவளவன் வழங்கினாா். முன்னதாக, இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சமத்துவ வழக்குரைஞா்கள் சங்க மாநிலச் செயலா் த. பாா்வேந்தன் வரவேற்றாா். துணைச் செயலா் அ.ச. அன்பழகன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com