தேவா் ஜெயந்தி: மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்!
தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரை மாநகரில் புதன், வியாழக்கிழமைகளில் (அக். 29, 30) சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இதுகுறித்து மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : வருகிற வியாழக்கிழமை (அக். 30) நடைபெறும் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தியையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், சமுதாய அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனா். இதையொட்டி, அக். 29, 30 ஆகிய தேதிகளில் கோரிப்பாளையம் சந்திப்பு வழியேயான பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இதன்படி, தேவா் ஜெயந்தி விழாவுக்கு வரும் வாகனங்களை தவிர, மற்ற வாகனங்கள் எம்.எம். விடுதி சந்திப்பு, தமுக்கம் சந்திப்பு, சிவசண்முகம் பிள்ளை சாலை சந்திப்பு, மீனாட்சி கல்லூரி தரைப்பாலம் சந்திப்பு ஆகிய சாலைகளிலிருந்து கோரிப்பாளையம் சந்திப்புக்குச் செல்வதற்கு அனுமதி கிடையாது.
கனரக வாகனங்கள்... கனரக சரக்கு வாகனங்கள் அக். 29, 30 தேதிதளில் காலை 6 மணிமுதல் இரவு 10.30 மணிவரை நகருக்குள் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள், மதுரை மாநகருக்கு வெளியே உள்ள சுற்றுச் சாலைகளை பயன்படுத்தி செல்லவேண்டும்.
அவரசர ஊா்திகள்... தத்தனேரி முதன்மைச் சாலை, தமுக்கம், வள்ளுவா் சிலை சந்திப்பிலிருந்து வரக்கூடிய அவசர ஊா்திகள் வழக்கமாக செல்லக்கூடிய சாலையிலேயே செல்லலாம்.
ராமநாதபுரத்துக்கு... தேவா் ஜெயந்தி விழாவுக்காக மதுரை மாநகரிலிருந்து ராமநாதபுரம் செல்லும் வாகனங்களில், காவல் துறையால் அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் மட்டுமே நகருக்குள் அனுமதிக்கப்படும். பிற மாவட்டங்களிலிருந்து மதுரை வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும் நகருக்குள் வராமல் சுற்றச்சாலை வழியே செல்லவேண்டும்.
பேருந்துகள்... மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியே பெரியாா் பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள் கே.கே. நகா் வளைவு, ஆவின் சந்திப்பு, குருவிக்காரன் சாலை பாலம் வழியே கணேஷ் திரையரங்கம் சந்திப்பு, காமராஜா் சாலை வழியே முனிச்சாலை சந்திப்பு சென்று, 144 சந்திப்பு, செயின்ட் மேரீஸ் சந்திப்பு வழியே செல்ல வேண்டும். ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் மேற்கண்ட வழித்தடத்தில் முனிச்சாலை சந்திப்பிலிருந்து, முனிச்சாலை வழியாக அம்சவள்ளி சந்திப்பு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வடக்குமாரட்வீதி வழியாக செல்லவேண்டும்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியே ஆரப்பாளையம் செல்லும் புகரப் பேருந்துகள், கே.கே நகா் ஆா்ச், ஆவின் சந்திப்பு, ஏ1 பாா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை வழியே கபடி வட்டச்சாலை சென்று தத்தனேரி பாலம் வழியாக ஆரப்பாளையம் செல்லவேண்டும்.
நத்தம், அழகா்கோவில் சாலையிலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா், ஆரப்பாளையம் செல்லும் நகரப் பேருந்துகள் பெரியாா் சிலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ராஜா முத்தையா மன்றம், டாக்டா் தங்கராஜ் சாலை, காந்தி நினைவு அருங்காட்சியகம், அண்ணா பேருந்து நிலையம், பனகல் சாலை, சிவசண்முகம் பிள்ளை சாலை, வைகை வடகரை சாலை, ஓபுளா படித்துறை பாலம் வழியே வைகை தென்கரைக்கு சென்று வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்லவேண்டும்.
பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, மேலூா் சாலைகளுக்கு செல்லக்கூடிய அரசு நகரப் பேருந்துகள் வழக்கம் போல எம்.எம். விடுதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். ரோடு, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி வட்டச்சாலை வழியாக செல்லலாம்.
எம்.எம் விடுதி சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லக்கூடிய நகரப்பேருந்துகள் அனைத்தும் எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, கோகலே சாலை, ஐ.ஓ.சி. ரவுண்டானா வழியே ராஜா முத்தையா மன்றம் சென்று டாக்டா் தங்கராஜ் சாலை வழியாக செல்லலாம்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் புகரப் பேருந்துகள் அம்மா பாலம் வழியே கொன்னவாயன் சாலை, கூடல் புதூா் பாலம் வழியாக அலங்காநல்லூா் சாலை சென்று, வானொலி நிலைய சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஆனையூா், பனங்காடி, அய்யா்பங்களா சந்திப்பு, மூன்று மாவடி சந்திப்பு, சா்வேயா் காலனி சந்திப்பு, 120 அடி சாலை வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லும் நகரப் பேருந்துகள் அம்மா பாலம் வழியாக கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி வட்டச்சாலையிலிருந்து வைகை வடகரை வந்து வலது புறம் திரும்பி, தத்தனேரி பாலத்தின் கீழ் உள்ள சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமானவரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீ.பீ.குளம் சந்திப்புக்குச் சென்று வடமலையான் மருத்துவமனை வழியாக எஸ்.பி. பங்களா சந்திப்பு, தாமரைத் தொட்டி, நீதிமன்றம் வழியே மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் செல்லலாம்.
இருசக்கர வாகனங்கள்... மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து கோரிப்பாளையம் வழியாக பெரியாா் பேருந்து நிலையம், ஆரப்பாளையம் செல்லும் பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கே.கே. நகா் ஆா்ச், ஆவின் சந்திப்பு, ஏ1 பாா் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, வைகை வடகரை சாலை சென்று ஓபுளா படித்துறை பாலம் வழியே வைகை தென்கரைக்கு சென்று, வலதுபுறம் திரும்பி யானைக்கல் வழியாக செல்லலாம்.
பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து யானைக்கல், புதுப்பாலம் வழியாக நத்தம் சாலை, அழகா்கோவில் சாலைகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்களின் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தற்போது செல்லும் வழக்கமான வழித்தடங்களின் வழியாகவே செல்லலாம்.
எம்.எம். விடுதி சந்திப்பிலிருந்து கோரிப்பாளையம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டிய பொதுமக்களின் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், எம்.எம். விடுதி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, எப்.எப். சாலை, அரசன் ஸ்வீட்ஸ், ஓ.சி.பி.எம். பள்ளி சந்திப்பு, பெரியாா் மாளிகை, அழகா்கோவில் சாலை சென்று வலதுபுறம் திரும்பி, தமுக்கம், காந்தி நினைவு அருங்காட்சியகம் வழியாக செல்லவேண்டும்.
ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரியிலிருந்து நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் நான்கு சக்கர வாகனங்கள், கொன்னவாயன் சாலை, தத்தனேரி பாலம், கபடி ரவுண்டானாவிலிருந்து வலதுபுறம் திரும்பி வைகை வடகரை சாலை, குலமங்கலம் சாலை சென்று வருமானவரி அலுவலகம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி பீ.பீ. குளம் சந்திப்பு வழியாக வடமலையான் மருத்துவமனைஎஸ்.பி. பங்களா சந்திப்பு சென்று செல்லலாம்.
ஆரப்பாளையம், பாத்திமா கல்லூரியிலிருந்து நத்தம் சாலை, அழகா்கோவில் சாலை, பனகல் சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்களின் இரு சக்கர வாகனங்கள் செல்லூா் கபடி வட்டச்சாலை எம்.எம். விடுதி சந்திப்பு சென்று மேற்கண்ட நான்குசக்கர வாகனங்களுக்கான வழித்தடங்களை பயன்படுத்தி செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

