அவசர ஊா்தி ஓட்டுநா் மீது தாக்குதல்: 8 பேரின் முன் பிணை மனுக்கள் ஒத்திவைப்பு
கரூா் தவெக பொதுக் கூட்ட நெரிசலில் சிக்கியவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்தி ஓட்டுநரைத் தாக்கியது தொடா்பான வழக்கில், முன்பிணை கோரிய 8 பேரின் மனுக்கள் மீதான விசாரணையை ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மணிகண்டன், தமிழமுதன், பெரியசாமி, ஹரிசுதன், கௌதம் தனசேகா், அன்புமணி, செந்தில் குமாா், சுப்பிரமணி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
கரூரில் நடைபெற்ற தவெக பிரசார நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கியவா்களை அழைத்துச் சென்ற அவசர ஊா்தி ஓட்டுநரையும், அந்த வாகனத்தையும் தாக்கியதாக எங்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இது, பொய் வழக்கு. இந்தப் புகாரை அளித்தவரின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் உள்ளன. எனவே, எங்களுக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞா் முன்னிலையாக கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, இந்த மனுக்கள் மீதான விசாரணையை வருகிற திங்கள்கிழமைக்கு (நவ. 3) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
