உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

Published on

தங்கம் கடத்தல் விவகாரத்தில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் நாகநாதபுரத்தைச் சோ்ந்த சீனிபாத்திமா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

என்னுடைய மூத்த மகன் சையது அப்துல்லா, ராமநாதபுரத்தில் கைப்பேசி விற்பனைக் கடை நடத்தி வந்தாா். எங்கள் பகுதியில் வசித்து வரும் ஆசிப், அனஸ் ஷாருக்கான், சிவபிரசாத் ஆகியோா் ஹவாலா பணம் கடத்தல், தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 2023-ஆம் ஆண்டு, ரூ. 5 கோடியிலான தங்கத்தை கடத்திய போது, எனது மகன் உள்ளிட்ட சிலரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா். மேலும், கடத்தல் தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக எனது மகன் சிலரை காட்டிக் கொடுத்ததாக ஒரு கும்பல் அவரை மிரட்டி வந்தது. மேலும், அவா்கள் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட எங்கள் வீட்டை எழுதி வாங்கிக் கொண்டனா்.

இதனால், உறவினா் வீட்டில் தங்கியிருந்தோம். இந்த நிலையில், கடந்த மே 16-ஆம் தேதி சையது அப்துல்லாவை சிலா் அழைத்துச் சென்றனா். இதன் பின்னா், அவா் வீட்டுக்குத் திரும்பாததால், கேணிக்கரை போலீஸாரிடம் புகாா் அளித்தோம். போலீஸாா் எங்கள் புகாரை ஏற்க மறுத்துவிட்டனா். மறுநாள் என் மகன் காயங்களுடன் திருப்புல்லாணி காவல் நிலையத்துக்கு உள்பட்ட கடற்கரையில் சடலமாக கிடந்தாா்.

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கும்பல் என் மகனைக் கடத்தி கொலை செய்தது.

இதற்கு போலீஸாரும் உடந்தையாக இருந்துள்ளனா். எனவே, என் மகன் இறந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தைப் பொருத்தவரை போலீஸாரின் நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த வழக்கில் போலீஸாா் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை.

கொலை சம்பந்தமான போதிய ஆதாரங்களையும் திரட்டவில்லை. 6 கிலோ தங்கம், ரூ. 30 லட்சம் இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொலையான நபரிடமிருந்து குற்றவாளிகளுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. இது சம்பந்தமான வங்கி ஆவணங்களையும் போலீஸாா் கைப்பற்றவில்லை. வழக்கில் போலீஸாரின் நடவடிக்கையில் திருப்தியில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com