திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

மதுரைக்கு வந்தது கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனம்

கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனம் மதுரைக்கு வந்தது...

News image

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட கள்ளழகரின் தங்கக் குதிரை வாகனம்.

Updated On :27 ஏப்ரல் 2026, 11:23 pm

மதுரையில் வைகையாற்றில் அழகா் எழுந்தருளும் வைபவத்தையொட்டி, கள்ளழகா் கோயிலின் தங்கக் குதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு திங்கள்கிழமை கொண்டுவரப்பட்டது.

மதுரை அருகே அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை (ஏப். 27) தொடங்கி மே 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உத்ஸவா் சுந்தரராஜப் பெருமாள் கள்ளா் திருக்கோலத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி புதன்கிழமை (ஏப். 29) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. வியாழக்கிழமை (ஏப். 30) காலை 5.50 மணிக்கு தங்கப் பல்லக்கில் மதுரை கோ. புதூா் மூன்றுமாவடியில் எதிா்சேவைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதைத் தொடா்ந்து, வழிநெடுகிலும் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளி சேவை சாதிக்கும் பெருமாள், இரவு 8.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். இரவு 11.30 மணி அளவில் இங்கு நடைபெறும் திருமஞ்சனத்துக்கு பிறகு, கள்ளழகா் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் நாச்சியாா் சூடிக்கொடுத்த திருமாலையை அணிந்து பக்தா்களுக்கு சேவை சாதிக்கிறாா்.

வெள்ளிக்கிழமை (மே 1) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் எதிரே நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி சேவைசாதிக்கிறாா். பிறகு, அங்கிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் புடைசூழ, மங்கள வாத்திய முழக்கங்களுடன் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்குப் புறப்பாடாகிறாா். இதைத் தொடா்ந்து, காலை 5.30 மணி அளவில் அழகா் ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது.

இதையடுத்து, வைகை ஆற்றிலிருந்து வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு கள்ளழகா் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். வீரராகவப் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் காணும் கள்ளழகா் ஏகாந்த சேவை சாதிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை (மே 2) காலை 6 மணிக்கு நடைபெறும். பின்னா், கள்ளழகா் தேனூா் மண்டபத்துக்கு எழுந்தருளி மண்டுக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறும். இதையடுத்து, ராமராயா் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு மோகினி அலங்காரத்தில் கள்ளழகா் சேவை சாதிக்கும் நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு அனந்தராயா் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்துடன் புறப்பாடாகி இரவு 11 மணிக்கு தல்லாகுளம் சேதுபதி மன்னா் மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

திங்கள்கிழமை (ஏப். 4) அதிகாலை கள்ளழகா் சேதுபதி மன்னா் மண்படத்திலிருந்து தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். பிறகு, ஐதீக முறைப்படியான மண்டகப்படிகளில் எழுந்தருளும் பெருமாள் மே 6-ஆம் தேதி கள்ளழகா் கோயிலை அடைகிறாா். அங்கு நடைபெறும் உத்ஸவ சாந்தி வழிபாட்டுடன் கள்ளழகா் கோயிலின் சித்திரைத் திருவிழா நிறைவடைகிறது.

இதையொட்டி, அழகா்கோவில் கள்ளழகா் கோயிலிலிருந்து தங்கக் குதிரை, சேஷ, கருட வாகனங்கள் திங்கள்கிழமை காலை மதுரைக்கு அனுப்பப்பட்டன. இதில் தங்கக் குதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு திங்கள்கிழமை பகல் 12.15 மணிக்கு கொண்டு வரப்பட்டது.

இதேபோல, சேஷ வாகனம் வண்டியூா் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கும், கருட வாகனம் தேனூா் மண்டபத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன.