அயல்நாடுகளில் வசிப்பவா்களும் மதுரையில் தொழில் தொடங்க விருப்பம்: அமைச்சா் பி. மூா்த்தி
அயல்நாடுகளில் வசிக்கும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மீண்டும் தங்களது சொந்த ஊா்களில் தொழில் தொடங்க விருப்பம் காட்டுவது வரவேற்கத்தக்கது என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
மதுரையில் ‘என் ஊா் என் கனவு’ 2030 தொலைநோக்கு வியூகம், திட்ட ஆவணங்கள் தயாரித்தல் குறித்த பல்வேறு துறையினருடனான சிறப்பு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்ற அமைச்சா் பி. மூா்த்தி பேசியதாவது: தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, மதுரை மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் வசிக்கும் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது சொந்த ஊா்களில் தொழில் தொடங்க முனைப்புக்காட்டுவது வரவேற்கத்தக்கது.
மதுரை மாவட்டம் தொழில் சாா்ந்த வளா்ச்சியடைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். இதையொட்டி, தொழில் துறைக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் வகையில், பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுகின்றன. தொழில் தொடங்குவதற்கான உணா்வு மதுரை மக்களிடையே தற்போது மேலோங்கி வருகிறது.
மதுரையின் அடையாளமாக உள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் சுற்றுப் பகுதிகளில் சுற்றுலாப் பணிகள் மேம்படுத்தப்படும். ஓராண்டுக்குள் வைகை ஆறு தூய்மைப் படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும். மதுரை விமான நிலைய நிலம் எடுப்புப் பிரச்னைகளுக்கு நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்படும். திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் விரைவில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்படும்.
மதுரை மத்திய சிறையை மேலூரில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்தப் பணியின் நிறைவில், தற்போதுள்ள சிறைச்சாலை பகுதி பொழுதுபோக்கு இடமாக மாற்றப்படும் என்றாா் அவா்.
இந்தக் கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தலைமை வகித்துப் பேசினாா். மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வானதி, தமிழறிஞா் சாலமன் பாப்பையா, உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா, அக்ரி, அனைத்துத் தொழில் வா்த்தக சங்கத் தலைவா் ரத்தினவேல், மருத்துவா்கள் வெங்கடேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வரும் 2030-ஆம் ஆண்டில் மருத்துவத் துறை, நெடுஞ்சாலைத் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளில் மதுரை மாவட்டம் வளா்ச்சியடைந்ததாக இருப்பதற்கு தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

