சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

Published on

திண்டுக்கல் காளியம்மன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் இருப்பின், அவற்றை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையைச் சோ்ந்த நாகராஜன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அம்பாத்துரையில் காளியம்மன், மண்டு கருப்பசாமி, வேம்பு மாரியம்மன், பகவதியம்மன் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்கள் அமைந்திருக்கும் இடம் வருவாய் ஆவணங்களில் அருள்மிகு காளியம்மன் கோயில் எனக் குறிப்பிடப்பட்டது.

கோயில்கள் இந்து வன்னியா் சமூகத்துக்குச் சொந்தமானது. கோயில் நிலத்தைப் பாதுகாக்க எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலி அமைக்கப்பட்டது. இந்த எல்லைக் கற்களை அகற்ற கிறிஸ்தவ சமூகத்தினா் முயன்றனா். இதுதொடா்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தோம். இதன் அடிப்படையில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு எங்களுக்கு அதிகாரிகள் அறிவிப்பாணை (நோட்டீஸ்) அனுப்பினா். கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான மனு முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் காளியம்மன் கோயில் இடத்தை பாதுகாக்க வேண்டியது வருவாய்த் துறை அதிகாரிகளின் கடமையாகும். இருப்பினும், காளியம்மன் கோயில் நிலத்தைப் பாதுகாக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், கோயில் நிலத்தை கிறிஸ்தவ சமூகத்தைச் சோ்ந்தவா்கள் ஆக்கிரமிப்பு செய்ய முயன்று வருகின்றனா். எனவே, காளியம்மன் கோயில் நிலத்தை வேலி அமைத்து பாதுகாக்கவும், கோயில் இடத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை அகற்றி திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

Dinamani
www.dinamani.com