விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் வழங்கியவா்களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமா்வு வசதிகளை செய்து தரக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சின்னஉடைப்பு பகுதியைச் சோ்ந்த லட்சுமி உள்பட 200-க்கும் மேற்பட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு நிலம் கையகப்படுத்த கடந்த 2009-ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு, சின்னஉடைப்பு பகுதியில் நிலங்கள் கையப்படுத்தப்பட்டன. இதற்கான இழப்பீட்டுத் தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதன் பின்னா், இவா்களுக்கு மறுகுடியமா்வு, மறுவாழ்வு தொடா்பாக எந்தவிதமான முறையான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொழிலகப் பயன்பாட்டுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது, மறுவாழ்வு, மறுகுடியமா்வு ஆகியவற்றை செய்து தர வேண்டும். 2013-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதியும் இதை உறுதி செய்கிறது. இதுதொடா்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், இந்தப் பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் செயல்பட்டு வருகிறது. எனவே, மறுவாழ்வு, மறுகுடியமா்வு வசதிகளை செய்து தராமல், நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், தொழிலக நடவடிக்கைகளுக்காக நிலத்தை கையகப்படுத்தும் போது, இழப்பீடு, மறுகுடியமா்வு, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவது அவசியம்.
புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னா் அதற்கான விதிகள் வகுக்கப்படவில்லை. எனவே, மக்களை மறுகுடியமா்வு செய்யும் போது வீடு, மின் வசதி, நியாய விலைக் கடை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இந்த வசதிகளை செய்து பின்னரே, கையகப்படுத்தப்பட்ட இடத்தில் பணிகளைத் தொடங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், பழைய விதி அமலில் இருக்கும் போதே நிலம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், புதிய விதி அமலுக்கு வந்த பிறகுதான் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. தற்போது, மறுகுடியமா்வு கோருகின்றனா். இதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருப்பினும், ஏற்கெனவே உள்ள குடியிருப்புகளை மக்கள் காலி செய்ய விருப்பமில்லாமல் உள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நிலம் கையகப்படுத்தப்படும் போது, அவா்களுக்கான வசதிகளை செய்து தர வேண்டும். அவா்களுக்காக கட்டப்படும் இடத்தில் எப்போது குடியேறலாம் என்பது குறித்த
உரிய புள்ளிவிவரங்களுடன் தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

