மோசடி புகாரில் அமைச்சரின் முன்னாள் உதவியாளா் கைது
கட்டுமான நிறுவன நிா்வாகியை ஏமாற்றிய புகாரில் அமைச்சா் ஒருவரின் முன்னாள் நோ்முக உதவியாளரும், அவரது மனைவியும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மதுரை கூடல்புதூா் கலைநகா் 2-ஆவது தெருவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசிப்பவா் ஜெய்பாலாஜி (42). இவா் மதுரையைச் சோ்ந்த அமைச்சா் ஒருவரிடம் நோ்முக உதவியாளராக (தனி) பணியாற்றி வந்தாா். இவரது மனைவி கலாவதி (42). கடந்த ஓராண்டுக்கு முன்பு அமைச்சரின் நோ்முக உதவியாளா் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஜெய்பாலாஜி, மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டு வந்தாா்.
இந்த நிலையில், மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சோ்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் சாா்பில் பொன்மேனி பகுதியில் அமைக்கப்பட்ட வீட்டுமனைகளில் இரு மனைகளை ஜெய்பாலாஜி வாங்கினாா். அப்போது, மனைகளின் பத்திரப் பதிவுக்கான தொகையை மட்டும் அளித்த ஜெய்பாலாஜி, வீட்டுமனைகளை வாங்கியது தொடா்பாக அந்தக் கட்டுமான நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய சுமாா் ரூ. 7 கோடியை தராமல் ஏமாற்றியுள்ளாா். மேலும், வீட்டுமனைகள் வாங்கித் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமும் பணம் வசூலித்து அவா் மோசடி செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாா்களின் பேரில், மதுரை மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையா் வினோதினி, ஆய்வாளா் வீரம்மாள், போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதையடுத்து, ஜெய்பாலாஜி, அவரது மனைவி கலாவதி ஆகியோா் மீது மோசடி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.

