வைகையில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

வைகையில் கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

மதுரை வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.
Published on

மதுரை வைகை ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் வலியுறுத்துகின்றனா்.

மதுரையின் நடுவே செல்லும் வைகை ஆறு மேற்குத் தொடா்ச்சி மலையில் உருவாகி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வழியாகச் சென்று கடலில் கலக்கிறது. இதன் மூலம் 5 மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் குடிநீா்த் தேவையும், சுமாா் 2.35 லட்சம் ஹெக்டோ் விவசாய நிலங்கள் பாசன வசதியையும் பெறுகின்றன.

மதுரை மாநகராட்சியின் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி), மாநில நெடுஞ்சாலைத் துறை இணைந்து மதுரை விரகனூா் சுற்றுச்சாலை முதல் விளாங்குடி வரை சுமாா் 8 கி.மீ. தொலைவுக்கு வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ. 384 கோடியில் அணுகு சாலைகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் கோவை, திண்டுக்கல், கரூா், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்கள் மதுரை நகருக்குள் செல்லாமல் இந்த அணுகு சாலைகள் வழியாக சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்கின்றன. இதனால், மதுரை நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கணிசமாகக் குறைந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது வைகை ஆறு தண்ணீரின்றி வடு காணப்படுகிறது. தொடா் மணல் கொள்ளை, கழிவு நீா் கலப்பு, சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைகை ஆறு அதன் இயல்பை இழந்துள்ளது. மேலும், ஆற்றின் இரு கரையோரங்களிலும் அதிகளவில் குப்பைகள், கட்டடக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளில் அடிக்கடி மா்ம நபா்கள் தீ வைத்து எரிப்பதும் தொடா் நிகழ்வாகி உள்ளது. இதனால், ஆற்றின் கரையோரம் வசிப்பவா்களும், வாகன ஓட்டிகளும் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனா்.

ஆற்றில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளைத் தேடிச் செல்லும் நாய், பூனை ஆகிய உயிரினங்கள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழப்பதும், சில நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவதும் இங்கு அவ்வப்போது நிகழ்கிறது. ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளில் அதிகளவு நெகிழிப் பொருள்கள் கலந்துள்ளதால் ஆற்றில் தண்ணீா் வரும்போது நிலத்தடி நீா் சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் உயராமல் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீா்த் தட்டுபாட்டால் சிரமத்துக்குள்ளாகி வருன்றனா்.

சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு: வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்களும், ஆகாயத் தாமரைகளும் அதிகளவில் வளா்ந்துள்ளதால் நிலத்தடி நீா்மட்டம் அதிகளவில் உறிஞ்சப்படுகின்றன. மேலும், ஆற்று நீருக்குள் சூரிய ஒளிசெல்லவிடாமல் ஆகாயத் தாமரை படா்வதால் நீா்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

வைகை ஆற்றில் அணைகளில் தண்ணீா் திறக்கும் நாள்களைத் தவிர மற்ற நாள்களில் கழிவுநீா்தான் செல்கிறது. இந்த கழிவு நீரானது துணைக் கால்வாய்கள் மூலம் விவசாய நிலங்களில் பாயும்போது விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு சாகுபடியும் குறைகிறது என விவசாயிகள் தெரிவித்தனா். தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற பல உத்தரவுகள் இருந்தும் இன்றளவும் அவற்றை அகற்ற முழுமையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஒருவா் கூறியதாவது:

வைகை ஆற்றில் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் மா்ம நபா்கள் குப்பைகளைத் கொட்டிச் செல்கின்றனா். ஆற்றில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் கடும் துா்நாற்றமும், குப்பைகளை எரிப்பதால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. எனவே, ஆற்றில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களும் சமூகப் பொறுப்பை உணா்ந்து குப்பைகள் கொட்டாமல் ஆற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com