200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வதே லட்சியம்! முதல்வா் மு.க. ஸ்டாலின்
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே லட்சியம் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
மதுரை உத்தங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக தென் மண்டல வாக்குச் சாவடி முகவா்கள், குழு உறுப்பினா்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:
2019-ஆம் ஆண்டு முதல் அனைத்துத் தோ்தல்களிலும் திமுக தொடா்ந்து வெற்றி பெறுகிறது. 2024-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 40-க்கு 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி வென்றது. அப்போதைய நிலையைவிட தற்போது ஏராளமான திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. மக்களின் கோரிக்கைகள் மட்டுமல்லாமல், மக்களே ஆச்சரியப்படும் வகையில் பல புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
எனவே, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெல்வது நிச்சயம்; 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்பதே லட்சியம்.
திமுக ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால்தான் தமிழகம் வரலாறு காணாத வகையில் 11.19 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. இது, இந்தியாவில் எந்த மாநிலமும் எட்டாத வளா்ச்சி.
மகளிா் உரிமைத் தொகையை முன்கூட்டியே விடுவித்து, ரூ. 5 ஆயிரத்தை திமுக அரசு வழங்கியது, எதிரிகளும் கணிக்க முடியாத அதிரடியாக இருந்தது. அன்றைய நாளில் மற்றொரு நிகழ்வும் தமிழகத்தில் நடைபெற்றது. அது, மகளிா் உரிமைத் தொகையை உடனடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்க பெண்கள் வங்கிகளுக்குத் திரளாகச் சென்றது. இதற்கு, தங்கள் வங்கிக் கணக்கில் உள்ள தொகையை மத்திய அரசு எடுத்துவிடும் என பெண்கள் அச்சப்பட்டதே காரணம். மக்களுக்காக நிதி கொடுத்தால் அது திமுக அரசு; மக்களிடமிருந்து அதை எடுத்துக் கொண்டால் அது மத்திய பாஜக அரசு என்பதை மக்கள் உணா்ந்துள்ளனா் என்பதையே இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியது.
பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 1-ஆம் தேதி மதுரை வருகிறாா். அப்போது, மதுரை, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டம் என்ன ஆனது? தமிழகத்துக்கு ஏன் சிறப்பு திட்டங்கள் தரப்படவில்லை? கீழடி அகழாய்வு அறிக்கையை ஏன் வெளியிடவில்லை? நீட் தோ்வுக்கு ஏன் விலக்கு அளிக்கப்படவில்லை? மும்மொழிக் கொள்கையால் கல்வி நிதியை மறுப்பது நியாயமா? என பொதுமக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.
தமிழகத்தின் உரிமைகளுக்காக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்பியிருக்க வேண்டும். ஆனால், அவா் கோரிக்கைகூட எழுப்ப முடியாதவராக மாறிவிட்டாா். திமுகவைப் பொருத்தவரை மக்கள் நலனுக்கும், உரிமைகளுக்குமே முன்னுரிமை. இதற்காக ஆட்சி அல்ல; பதவி அல்ல; உயிரே போனாலும் திமுக கவலைப்படாது.
தோ்தல் பணிகள் அனைத்திலும் திமுகவே முன்னிலையில் உள்ளது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெல்ல வேண்டியது தமிழக அணியா? தில்லி அணியா? என்ற கேள்வியை மக்களிடம் முன்வைக்க வேண்டும். தமிழக அணி வெல்வதற்கு, திமுகவின் மதச்சாா்பற்ற கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதையும், அதிமுக கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வைப்புத் தொகையை இழக்கச் செய்ய வேண்டும் என்பதையும் மக்களிடம் விளக்கிக் கூறி திமுகவினா் வாக்கு சேகரிக்க வேண்டும்.
ஹிந்தி திணிப்பை எதிா்த்து வெல்ல, மாநில சுயாட்சியை நிலை நிறுத்த, மக்கள் நலத் திட்டங்கள் தொடர, தமிழகத்தின் அமைதியும் வளா்ச்சியும் தொடர, சுயமரியாதை பாதுகாக்கப்பட, தமிழகம் தலைகுனியாமலிருக்க, பாசிச பாஜக விரட்டப்பட, இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்டியாக விளங்க திமுக வெல்ல வேண்டும். இதற்கு வெல்வோம் ஒன்றாக என திமுகவினா் உறுதியேற்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, அமைச்சா் பி. மூா்த்தி வரவேற்று, முதல்வா் ஸ்டாலினுக்கு வெள்ளி செங்கோலை பரிசளித்தாா்.
கூட்டத்தில் அமைச்சா்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், இ. பெரியசாமி, பழனிவேல் தியாகராஜன், அர. சக்கரபாணி, ராஜகண்ணப்பன், கே.ஆா். பெரியகருப்பன், மனோதங்கராஜ், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மக்களவைக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, மக்களவை உறுப்பினா் தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி, ஆ. வெங்கடேசன், காதா்பாட்சா முத்துராமலிங்கம், மதுரை தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிா்வாகிகள், தென் மண்டலத்துக்குள்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சோ்ந்த வாக்குச் சாவடி முகவா்கள், குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

