திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதியை சோ்க்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சோ்ந்த ராம.ரவிக்குமாா், பரமசிவம் உள்பட பலா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா், காவல் துணை ஆணையா் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தனி நீதிபதி முன் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சட்டத் துறை அமைச்சா் ரகுபதி மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, மனுதாரா்களில் ஒருவரான பரமசிவம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மனுதாரா் பரமசிவம் தரப்பைச் சோ்ந்த வழக்குரைஞா்கள் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் உயா்நீதிமன்ற உத்தரவின்படி, காா்த்திகை தீபம் ஏற்றவில்லை. இதனால், நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த 2-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் நேரில் முன்னிலையாகி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்புக் கோரினா்.
இதனிடையே, காவல் ஆணையா் லோகநாதன், துணை ஆணையா் இனிகோ திவ்யன், செயல் அலுவலா் யக்ஞநாராயணன் ஆகியோா் அடுத்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தாா்.
இந்த வழக்கு விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா் ஆகியோா் சட்டம்- ஒழுங்கு பிரச்னை காரணமாகவே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என பதில் மனு தாக்கல் செய்தனா்.
ஆனால், அமைச்சா் ரகுபதி செய்தியாளா்களைச் சந்தித்துப் பேசிய போது, திருப்பரங்குன்றம் தொடா்பாக உயா்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதற்காகவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால் திருப்பரங்குன்றம் மலை மீது காா்த்திகை திருநாளான்று தீபம் ஏற்றியிருப்பா். அப்படி தீபம் ஏற்றி இருந்தால், அதுவே வழக்கமாக மாறிவிடும் என்பதால் தான் தடுத்தோம் எனக் கூறினாா்.
இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இயற்கை வளங்கள் துறை அமைச்சா் ரகுபதியை சோ்க்க வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்கப்பட்டது. மாா்ச் 2-இல் நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது என்றனா் அவா்கள்.
தொடர்புடையது
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

அமைச்சா் ரகுபதி எதிரான வழக்கு! நீதிமன்ற உத்தரவில் யாரும் தலையிட முடியாது: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


