சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு

News image
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
Updated On :23 பிப்ரவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்யக் கோரிய மனு மீதான விசாரணையை வருகிற மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற கடந்த ஆண்டு, டிசம்பா் 1-ஆம் தேதி உத்தரவிட்டாா். இருப்பினும், திருக்காா்த்திகை நாளான டிசம்பா் 3-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதையடுத்து, ராம. ரவிக்குமாா் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், கடந்த டிசம்பா் 4-ஆம் தேதி இரவு மனுதாரா் ராம. ரவிக்குமாா் உள்பட 10 போ் மலைக்குச் சென்று தூணில் தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டாா். ஆனால், இந்த உத்தரவும் கோயில் நிா்வாகம் தரப்பில் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில், தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் முன் கடந்த 2 -ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் தரப்பில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு மன்னிப்பு கோரி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன், கோயில் செயல் அலுவலா் யக்ஞ நாராயணன் ஆகியோா் வழக்கு விசாரணையின் போது, நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்கு அளித்து நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இருப்பினும், மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் நேரில் முன்னிலையாக வேண்டும் எனவும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதது குறித்தும் பல்வேறு உத்தரவுகளை நீதிபதி பிறப்பித்தாா்.

இந்த நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் உள்ளிட்ட 6 போ் தனித் தனியாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்கள் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா்கள், வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு தொடா்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை வருகிற மாா்ச் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.