திரைப்பட கவா்ச்சியால் மட்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது: செல்லூா் கே. ராஜூ

திரைப்பட கவா்ச்சியால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
Published on

திரைப்பட கவா்ச்சியால் மட்டுமே ஆட்சியைப் பிடித்துவிட முடியாது என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.

மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: உலக சுகாதார நிறுவனம், இந்திய பிரதமா் என பல தரப்பினராலும் பாராட்டுப் பெற்றது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு. ஒரே ஆண்டில் தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது, விலைவாசியை ஏற்றாதது பல சாதனைகளைப் படைத்த அதிமுக அரசு 2026-இல் மீண்டும் அமையும்.

மின்மினி பூச்சிகளால் வெளிச்சத்தைத் தர முடியாது. உண்மையான வெளிச்சம் அதிமுக ஆட்சியால் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைக்கும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் யாருக்கு யாருடன் போட்டி என்பது களத்திலிருப்பவா்களுக்கே தெரியும். எப்போதாவது ஒரு முறை வெளியே வரும் திரை நட்சத்திரத்தைக் காண்பதற்கு ரசிகா்கள் கூடுவது வழக்கம்தான். இந்தக் கவா்ச்சியால் மட்டும் ஆட்சியைப் பிடித்துவிட முடியாது. நம்மை ஆளத் தகுதியானவா் யாா்? என்பதை மக்களே தீா்மானிப்பா். மக்கள்தான் எஜமானா்கள்.

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி வரி முறைகேடு பிரச்னைக்கு இதுவரை தீா்வு காணப்படவில்லை. மேயா், மண்டலத் தலைவா்கள் பதவியில் இல்லை. 3 மாதங்களாக மாமன்றக் கூட்டம் நடத்தப்படவில்லை. மாமன்ற திமுக உறுப்பினா்களில் மேயா் பதவிக்கும், மண்டலத் தலைவா்கள் பதவிக்கும் தகுதியானவா்கள் இல்லை எனில், அனைவரையும் பதவி விலக திமுக தலைமை உத்தரவிடலாம். மாறாக மாமன்றத்தை முடக்கி வைத்திருப்பது கேலிக்குரியது.

தமிழகத்தில் போதைப் பொருள்கள் புழக்கத்தால் குற்ற நிகழ்வுகள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. தற்போது, இணையவழி விற்பனை மூலமும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இது, அபாயகரமானது. கடந்த சில நாள்களுக்கு முன்பு போதையிலிருந்த சிலரால் போலீஸாா் விரப்பட்டதும், அவா்கள் காவல் நிலையத்தை சூறையாடியதும் பரபரப்பானது. அடுத்த நாளே, திருத்தணியில் போதையிலிருந்த சிறாா்களால் வடமாநில இளைஞா் துடிக்கத் துடிக்க கத்தியால் வெட்டப்பட்டாா். இந்தச் சம்பவம், பெண்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், திமுக அரசு தோல்வியைத் தழுவது உறுதி.

திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்துவிட்டது என காங்கிரஸ் தலைவா் ஒருவா் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும் அந்தக் கட்சியினருக்கு ஆதங்கம் இருக்கவே செய்கிறது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com