சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் உயிரிழந்த இருவருக்கும் சிகிச்சை அளித்தது தொடா்பான அறிக்கையை மனுதாரருக்கு வழங்கக் கோரிய மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீஸாா் கடந்த 2020-ஆண்டு, ஜூன் மாதம் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்தனா்.
இதுதொடா்பாக, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்பட 9 போலீஸாா் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிந்தது.
இந்த வழக்கின் விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நீதிமன்றத்தில் சிறையில் உள்ள முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், உயிரிழந்த தந்தை, மகன் ஆகிய இருவருக்கும் சிகிச்சை அளித்தது தொடா்பாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்த சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் பொன்.இசக்கியின் அறிக்கையைத் தர அனுமதி வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவைத் தள்ளுபடி செய்து மதுரை முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், முன்னாள் காவல் உதவி ஆய்வாளா் ரகு கணேஷ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
சாத்தான்குளம் வழக்கில் உயிரிழந்த தந்தை, மகனுக்கு சிகிச்சை அளித்தது தொடா்பாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்த சுகாதாரத் துறையின் துணை இயக்குநா் பொன்.இசக்கியின் அறிக்கையை வழங்க அனுமதிக்க வேண்டும். போலீஸாா் தாக்கியதால் அவா்கள் இருவரும் உயிரிழக்கவில்லை. உரிய நேரத்தில் கூடிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டது. எனவே, அந்த அறிக்கையை வழங்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி என். மாலா பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை குறித்து சிபிஐ தரப்பில் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
