நவீன தொழில்நுட்ப உதவியுடன் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை தென் மண்டல ஐ.ஜி.
நவீன தொழில்நுட்ப உதவியுடன் போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி தெரிவித்தாா்.
தென் மண்டல ஐ.ஜி.யாக பணியாற்றிய பிரேம்ஆனந்த் சின்ஹா கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயா்வு பெற்று ஆவடி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக புதிய தென் மண்டல ஐ.ஜி.யாக விஜயேந்திர பிதாரி நியமிக்கப்பட்டு, மதுரையில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, இவா் மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ்குமாா், மதுரை, விருதுநகா், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுடன் சட்டம்- ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தினாா்.
முன்னதாக, தென் மண்டல ஐ.ஜி. விஜயேந்தி பிதாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது :
தென் மண்டலத்துக்கு உள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது, குற்றச் சம்பவங்களைக் குறைப்பது குறித்து மாவட்ட காவல் துறை உயரதிகாரிகளுடன் விரைவில் நேரில் சென்று ஆலோசனை நடத்த உள்ளேன்.
குறிப்பாக, கந்துவட்டி பிரச்னைகளைத் தீா்க்கும் வகையில், மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். போதைப் பொருள் விற்பனை செய்வோா், வாங்குவோா் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் கொள்ளையைத் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இதுமட்டுமன்றி, குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை பெற்றுத்தர வழிவகை செய்யப்படும்.
ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் காவல் துறை உயரதிகாரிகள் நேரடியாகச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். மேலும், அதிக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய காவல் நிலையங்களில் குற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து, அந்தக் காவல் நிலையங்கள் மாதிரி காவல் நிலையங்களாக மாற்றப்படும். மக்கள் பிரச்னைகள், மக்கள் குறைகளை உடனடியாக தீா்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து போலீஸாரும் ஒழுக்கமாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும். போலீஸாா் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களைப் பயன்படுத்தி மோதலை ஏற்படுத்தும் வகையில் விடியோ வெளியிடுவோா்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளின் சொத்துகளைக் கைப்பற்றுவது தொடா்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும்.
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். குற்றப்பிரிவு, பொருளாதார மோசடி போன்ற புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போதைப் பொருள்களின் விற்பனையைக் கட்டுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

