வலைச்சேரிப்பட்டி 4 வழிச் சாலையில் உயா்நிலைப் பாலம் அமைக்கக் கோரி மனு

Published on

மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலை வலைச்சேரிப்பட்டி சந்திப்பில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம் :

மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வலைச்சேரிப்பட்டி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம சந்திப்பின் வழியாக மதுரை- திருச்சி நான்கு வழிச்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் எங்கள் கிராமத்தின் அருகே உயா்நிலைப் பாலம் அமைக்க கோரிக்கை விடுத்தோம். ஆனால் பாலம் கட்டப்படவில்லை.

இதனால், வலைச்சேரிப்பட்டி, கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டி, வேலாயுதம்பட்டி, தொந்திலிங்கபுரம், அம்மன் கோவில்பட்டி, மேல் புதுப்பட்டி, ரெட்டியாபட்டி, பூசாரிப்பட்டி, வலையங்குளத்துப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதிக்ககப்பட்டு வருகின்றனா்.

உயா்நிலைப் பாலம், சுரங்க கடவுப் பாதை அமைக்காததால் இதுவரை நேரிட்ட விபத்துகளில் 25-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். ஏராளமானோா் காயமடைந்தனா். எனவே, மதுரை மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுத்து வலைச்சேரிப்பட்டி சந்திப்பில் உயா்நிலைப் பாலம் அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com