திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்கோப்புப்படம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான விசாரணைக்குத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான விசாரணைக்குத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த ரகுநாத், திருமலை, விவேக் உள்ளிட்ட 12 போ் இணைந்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த நாங்கள், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், தீபம் ஏற்றுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய அதிகாரிகளுக்கு எதிராக கண்டனப் போராட்டத்தை நடத்தினோம்.

இதற்காக எங்கள் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எங்கள் மீது பதியப்பட்ட வழக்கு ஏற்கத்தக்கது அல்ல. வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மனு குறித்து பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்களின் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. எனவே, வழக்கு விசாரணை வருகிற பிப். 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Dinamani
www.dinamani.com