ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 57 போ் விடுவிப்பு
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 57 பேரை விடுவித்து, மதுரை மாவட்ட 5-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2017 -ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இததை எதிா்த்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
குறிப்பாக, மதுரை மாநகரம், மாவட்டத்தின் புகா்ப் பகுதிகளில் பொதுமக்கள், இளைஞா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த வகையில், உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் அலங்காநல்லூா் பகுதியில் ஜல்லிக்கட்டு ஆா்வலா்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 64 போ் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் மீது அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட 5 -ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 2018 -ஆம் ஆண்டு முதல் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, முன்னிலையாகாத முகிலன், சபீா், காா்த்திகா, செந்தில்பிரபு ஆகிய 4 பேரின் வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டது. மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய 3 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு மதுரை மாவட்ட 5 -ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜல்லிக்கட்டு போட்டி ரத்துக்கு எதிராக அலங்காநல்லூா் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 57 பேரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இந்த வழக்கில் முன்னிலையாகாத முகிலன், சபீா், காா்த்திகா, செந்தில்பிரபு ஆகிய 4 போ் மீதான விசாரணை மட்டும் தனியாக நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

