சுகாதார ஆய்வாளா் தோ்வு முறைகேடு: விசாரணை முடியும் வரை பணி நியமனம் இல்லை!
சுகாதார ஆய்வாளா் தோ்வு முறைகேடு விவகாரத்தில், வழக்கு விசாரணை முடியும் வரை பணி நியமனம் நடைபெறாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை உறுதியளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதியைச் சோ்ந்த கதிா் ஜாய்சன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1,429 சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, தோ்வு மையங்களில் வெளிப்படையாகவே கைப்பேசி பயன்படுத்தவும், விடைகளைப் பாா்த்து எழுதவும் அனுமதிக்கப்பட்டது. இதன்மூலம், தோ்வுக்கான விதிமுறைகள் முழுமையாக மீறப்பட்டன.
இந்த நிகழ்வுகள் தோ்வு மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளன. எனவே, நோ்மையாக நடைபெறாத இந்தத் தோ்வை ரத்து செய்து, மறு தோ்வு நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், சுகாதார ஆய்வாளா் பணி நியமனத்துக்கு ஏற்கெனவே இடைக்காலத் தடை விதித்தது. இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: தமிழகத்தில் மதுரை, தருமபுரி உள்பட 83 மையங்களில் நடைபெற்ற தோ்வில் முறைகேடு நடைபெற்றது என்றாா்.
இதற்கு, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், வழக்கு விசாரணை முடியும் வரை பணி நியமனங்கள் நடைபெறாது என உறுதி அளித்தாா்.
இதையடுத்து, நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரும் நிவாரணம் தொடா்பாக அரசின் நிலைப்பாட்டை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால், முறைகேடுகள் கண்டறியப்பட வேண்டியது அவசியம்.
எனவே, துணை ஆட்சியா் நிலையிலான அலுவலரைக் கொண்டு இந்த புகாா் தொடா்பாக விசாரிக்க வேண்டும். இதுதொடா்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற மாா்ச் 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

