அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை!
சுசீந்திரத்தில் கோயில் தோ்த் திருவிழாவின் போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவருக்கு முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் பகுதியைச் சோ்ந்த கிரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :
சுசீந்திரத்தில் உள்ள ஸ்ரீதாணுமாலயன் கோயிலின் தோ்த் திருவிழா கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு தொடங்கி வைத்தாா். தேரோட்டம் தொடங்கிய போது, சில பக்தா்கள் ‘பாரத் மாதா கி ஜே‘, ‘ஹர ஹர மகாதேவா‘ என்ற முழக்கங்களை எழுப்பினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அமைச்சா் சேகா்பாபுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக என் மீது சுசீந்திரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் எனக்கு முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் இருந்தனா். இதில், மனுதாரா் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தது தவறு எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு : மனுதாரா் வாரம் ஒருமுறை வழக்குப் பதிவு செய்த காவல் நிலையத்தில் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும். நிபந்தனைகளுடன் மனுதாரருக்கு முன்பிணை வழங்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

