அலங்காநல்லூா் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு: 60 போ் காயம்!
ஜல்லிக்கட்டு போட்டியை வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து, மாடுபிடி வீரா்கள் அமைச்சா் பி. மூா்த்தி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். காளைகள், மாடுபிடி வீரா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின்னரே போட்டிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில், முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை, மேலூா் தொகுதி திமுக சாா்பில் ஜல்லிக்கட்டு போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 60 போ் காயமடைந்தனா்.
இந்தப் போட்டிக்காக 1,207 காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவற்றுள் உடல்நலக் குறைவு, விதிமுறைகளை மீறியது என 7 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. எஞ்சிய காளைகள் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்டன. இறுதிச் சுற்று வரை 1,200 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
மேலும், ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 50 மாடுபிடி வீரா்கள் களமிறங்கி சீறிப் பாய்ந்த காளைகளை அடக்கினா். இதையடுத்து, காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும் மிதிவண்டி, மெத்தை, பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
60 போ் காயம்: ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள், பாா்வையாளா்கள் என மொத்தம் 60 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு அலங்காநல்லூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த 10 போ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனா். மேலும், 10-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் வாடிவாசல் பகுதியில் முகாமிட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனா்.
இந்த நிகழ்வில், சோழவந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேஷன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதில் அலங்காநல்லூா், வாடிப்பட்டி, சமயநல்லூா், பாலமேடு, அய்யூா், சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் வருகை தந்து போட்டியைக் கண்டு ரசித்தனா்.

