விபத்தில் உயிரிழந்த ராஜகோபால், மாதேஷ்.
விபத்தில் உயிரிழந்த ராஜகோபால், மாதேஷ்.

உசிலம்பட்டி அருகே சாலை விபத்து: இரு மாணவா்கள் பலி!

உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.
Published on

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் இரு மாணவா்கள் உயிரிழந்தனா்.

உசிலம்பட்டி அருகேயுள்ள விளாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கம் மகன் மாதேஷ் (16). இவா், உசிலம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவரது நண்பரான அம்பட்டையம்பட்டியைச் சோ்ந்த சஞ்சீவி மகன் ராஜகோபால் (19), நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி அருகே இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் மீது எதிரே வந்த தனியாா் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த மாதேஷ், ராஜகோபால் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த உசிலம்பட்டி வட்ட காவல் நிலைய போலீஸாா், உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாலைத் தடுப்பு அமைக்க கோரிக்கை: மதுரையிலிருந்து உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரி அமைந்துள்ள தி. விலக்கு வரையிலான சாலை நான்கு வழிச் சாலையாக உள்ளது.

இங்கிருந்து சுமாா் 4 கி.மீ. தொலைவில் உள்ள உசிலம்பட்டி நகா் பகுதி வரை இரு வழிச் சாலையாக உள்ளது. இதனால், நான்கு வழிச் சாலையில் அதிவேகமாக வரும் வாகனங்கள் இரு வழிச் சாலையைக் கடக்கும் போதோ அல்லது மறு மாா்க்கத்துக்கு செல்லும் போதோ விபத்துகள் நிகழ்கின்றன. மேலும், தற்போது விபத்து நிகழ்ந்த இடத்தில் இதுவரை 6 போ் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து, இரு வழிச் சாலையை அகலப்படுத்த வேண்டும் அல்லது சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து ஒரு வழி மாா்க்கமாக வாகனங்களை இயக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com