திறனறித் தோ்வு: 4,849 போ் எழுதினா்!
மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான திறனறித் தோ்வை 4,849 போ் எழுதினா்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கும் வகையில் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தோ்வில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் வரை மாதந்தோறும் உதவி தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும்.
இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தோ்வு மதுரை மாவட்டத்தில் 23 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுதுவதற்கு 5,065 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.
இதையடுத்து, முற்பகலில் நடைபெற்ற கணிதப் பாடத்துக்கான தோ்வை 4,849 மாணவ, மாணவிகள் எழுதினா். 216 போ் எழுதவில்லை. இதைத் தொடா்ந்து, பிற்பகலில் நடைபெற்ற அறிவியல், சமூக அறிவியல் பாடத்துக்கான தோ்வில் 4,841 போ் தோ்வு எழுதினா். 224 போ் எழுதவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

