கி.பி. 16ஆம் நூற்றாண்டில் பெண்களை சிறைபிடித்தது விருதுநகர் பகுதியை ஆட்சி செய்த சங்குப்பிள்ளை, மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதிகள் பற்றி குறிப்பிடும் செப்பேடு பழனியில் கண்டறியப்பட்டுள்ளது.
பழனி பகுதியில் ஒருவர் வீட்டில் இருந்த செப்பேட்டை ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி திங்கள்கிழமை கூறியது:
தற்போது கிடைத்துள்ள செப்பேடு 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த செப்பேடு இரண்டாக உடைந்துள்ளது. செப்பேடு முகப்பில் சூரிய, சந்திர வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
செப்பேடு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் பகுதியில் 115 வரிகளும், இரண்டாவது பகுதியில் 60 வரிகளும் எழுதப்பட்டுள்ளன. கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தற்போதுள்ள விருதுநகர் பகுதியை குறுநில மன்னர் போல ஆண்டு வந்த சங்குப்பிள்ளை என்பவருக்கு அப்பகுதி பொதுமக்கள் இந்த செப்பேட்டை எழுதித் தந்துள்ளனர்.
இதில் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள் உள்ளன.
கி.பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களின் தளபதியாக இருந்த அரியநாத முதலியார் பற்றி இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கி.பி.1551ஆம் ஆண்டு சங்குப்பிள்ளை ஆட்சியின்கீழ் இருந்த வடபட்டியை முற்றுகையிட்டு இரண்டு பெண்களையும், ரெண்டப்புளியை முற்றுகையிட்டு மூன்று பெண்களையும் சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு ஒரு ஆண்டு முன்னதாக கி.பி.1550இல் மதுரை நாயக்க மன்னர்களின் மற்றொரு தளபதியான அண்ணாமலை நாயக்கர் மன்னார் கோட்டையை முற்றுகையிட்டு மூன்று பெண்களை சிறைபிடித்து மதுரைக்கு கொண்டு சென்றுள்ளார்.
தனது பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் ஊர் மானத்தை மீட்கவும், பெண்களின் மானத்தை காக்கவும் சங்குப்பிள்ளை தனது ஆள்களை அனுப்பி 880 பொற்காசுகள் கொடுத்து மீட்டு வந்துள்ளார்.
செப்பேட்டில் அந்த காலத்திலேயே பெண்களின் பெயர்களை குறிப்பிடாமல் இன்னார் மகள், இன்னார் சகோதரி என்றே குறிக்கப்பட்டுள்ளது. இந்த சிறைமீட்புக்கு நன்றிக் கடனாக ஊர்மக்கள் சேர்ந்து சோலையழகன் என்பவரை வைத்து செப்பேட்டை எழுதி சங்குப்பிள்ளைக்கு கொடுத்துள்ளனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

7.6.1976: விமான விபத்தில் ஒரு மாநில முதல்வர், 3 மந்திரிகள் பலி

எங்கள் சமூக ஊடக பதிவுகளை நீங்கள் அகற்றலாம், ஆனால் எங்களை அல்ல: சிஜேபி நிறுவனா் அபிஜீத் டிப்கே பேட்டி

‘பாஜகவுடன் தொடா்பு’ குற்றச்சாட்டு: விளக்கம் கேட்டு காங்கிரஸுக்கு எம்.ஏ. பேபி கடிதம்





