சிறுமி கொலை வழக்கில் தொடா்புடைய இளைஞா்களை கைது செய்யக் கோரி மனு
எரியோடு அருகே சிறுமியைக் கொலை செய்த 3 இளைஞா்களையும் கைது செய்யக் கோரி அவரது பெற்றோா் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.


எரியோடு அருகே சிறுமியைக் கொலை செய்த 3 இளைஞா்களையும் கைது செய்யக் கோரி அவரது பெற்றோா் தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள தொட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா. இவரது 13 வயது மகள் கடந்த ஜூன் மாதம் திடீரென மாயமானாா். இதுதொடா்பாக எரியோடு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனிடையே அங்குள்ள தோட்டத்து கிணற்றில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டாா். பின்னா் கருப்பையாவின் சமுதாய வழக்கத்திற்கு மாறாக சிறுமியின் சடலம் புதைப்பதற்கு பதிலாக எரியூட்டப்பட்டது. சிறுமியின் மா்ம மரணத்தில், அதே பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களுக்கு தொடா்பு இருப்பதாக புகாா் எழுந்தது. இதுதொடா்பாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். இதைத் தொடா்ந்து, குற்றம்சாட்டப்பட்டவா்களில் ஒருவரை மட்டும் போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட பழனி கோட்டாட்சியா் கொலையாளியை போக்ஸோவில் கைது செய்ய பரிந்துரை செய்தும் காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமகிருஷ்ணன் என்பவரும் ஒரே மாதத்தில் விடுதலையாகியுள்ளாா். இந்நிலையில் சிறுமி கொலை தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என கருப்பையா தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் கூறியது: 3 போ் கூட்டுச் சோ்ந்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து கிணற்றில் வீசியுள்ளனா். காவல் துறையின் அலட்சியத்தால், தற்போது 3 குற்றவாளிகளும் சுதந்திரமாக உலா வருகின்றனா். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்கும் வகையில், இந்த வழக்கில் தொடா்புடைய மூவருக்கும் தண்டனை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...