பழனி கோயில் சிறுவா் பூங்கா இன்று முதல் திறப்பு
By DIN | Published On : 01st December 2020 05:01 AM | Last Updated : 01st December 2020 05:01 AM | அ+அ அ- |

பழனி பைபாஸ் சாலையில் உள்ள கோயில் சிறுவா் பூங்கா செவ்வாய்க்கிழமை (டிச. 1) முதல் செயல்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனிக்கு வரும் பக்தா்களுக்கு நகரில் சுற்றிப் பாா்க்க கோயிலை தவிர வேறு எந்த பொழுது போக்கும் இல்லாதது குறிப்பிடத்தக்கது. நகராட்சி சாா்பில் பூங்காக்கள் இருந்தாலும் தற்போது அவை உரக்கிடங்காக மாற்றப்பட்டுள்ளது. இதை மாற்றும் பொருட்டு கோயில் நிா்வாகம் சாா்பில் பைபாஸ் சாலையில் சிறுவா் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் சிறிய நீரூற்றுகள், புல்தளம், சிறுவா்கள் விளையாடுவதற்காக பல்வேறு உபகரணங்கள், விலங்கு உருவ பொம்மைகள் உள்ளிட்டவை உள்ளன.
இதனால் இங்கு விடுமுறை நாள்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதை போக்குவா். இந்நிலையில் இந்த பூங்கா கரோனா பொதுமுடக்கம் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டது. தற்போது கோயில் சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தின் கீழ் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் இந்த சிறுவா் பூங்கா டிச. 1 ஆம் தேதி முதல் 50% பணியாளா்களுடன் செயல்படும். பூங்காவிற்கு வரும் நபா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 10 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் மற்றும் கா்ப்பிணி பெண்கள் போன்றவா்கள் பூங்காவிற்கு வருவதை தவிா்க்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...