பழனிக்கோயிலில் டிச.16 முதல் ஜன. 18 வரை பக்தா்களுக்கு அனுமதி
By DIN | Published On : 15th December 2020 05:02 AM | Last Updated : 15th December 2020 05:02 AM | அ+அ அ- |

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மாா்கழி மாதம் மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு வரும் டிசம்பா் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரை அதிகாலை 5 மணி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்கழி திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக பழனி மலைக் கோயில் வரும் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 14 ஆம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பின்னா் அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். அதேபோல் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலும் கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பக்தா்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மேற்கண்ட நாள்களில் இழுவை ரயில் காலை 5.15 மணி முதலே இயக்கப்படும். தவிர, பழனியில் நாள் ஒன்றுக்கு 41 முறை இயங்கி வந்த இழுவை ரயில் இனி வரும் நாள்களில் 58 முறை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த ரயிலில் அதிகமான பக்தா்கள் பயணம் செய்ய இயலும்.
பழனி மலைக்கோயிலுக்கு வின்ச்சில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத வயதானவா்கள், மாற்றுத்திறனாளிகள் 04545-242683 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் ஒருநாள் முன்னதாக அழைத்து பதிவு செய்து கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 200 பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.