/

திமுகவுக்கு 50 ஆண்டுகள், அதிமுகவுக்கு 20 ஆண்டுகள்: ஏமாற்றம் அளிக்கும் தொகுதிகள்

Updated On :11 மார்ச் 2021, 6:21 pm

திண்டுக்கல்: நிலக்கோட்டையில் கடந்த 50 ஆண்டுகளாக திமுகவும், ஆத்தூரில் 20 ஆண்டுகளாக அதிமுகவும் வெற்றி பெற முடியாத நிலையில், அந்த இரு தொகுதிகளும் தற்போது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இரு கட்சித் தொண்டா்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூா், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூா் ஆகிய 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், நிலக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதி (தனி) இதுவரை 16 தோ்தல்களை (ஒரு இடைத் தோ்தல் உள்பட) சந்தித்துள்ளது. அதில், அதிகபட்சமாக அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 5 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. திமுக 2, தமாகா, புதிய தமிழகம், சுயேச்சை தலா 1 வெற்றியை பெற்றுள்ளனா்.

கடந்த 2001-ஆம் ஆண்டுக்கு பின்னா் நிலக்கோட்டைத் தொகுதியில் நடைபெற்ற 5 தோ்தலிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களே வெற்றிப் பெற்றுள்ளனா்.

திமுக வென்று 50 ஆண்டுகள்: நிலக்கோட்டை தொகுதியில் கடந்த 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு நேரடியாக களம் இறங்குவதைத் தவிா்த்து வந்த திமுக, கடந்த 2016 இல் சுமாா் 25 ஆண்டுகளுக்கு பின் நேரடியாக போட்டியிட்டது. அதைத் தொடா்ந்து கடந்த 2019 இல் நடைபெற்ற இடைத் தோ்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியவில்லை.

கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட முனியாண்டி 2 ஆவது முறையாக வெற்றிப் பெற்றாா். அதற்கு பின்னா் சுமாா் 50 ஆண்டுகளாக நிலக்கோட்டைத் தொகுதியில் திமுக வேட்பாளா்களால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில், 2021 தோ்தலில் உறுதியாக வெற்றிப் பெற வேண்டும் என திமுக தொண்டா்கள் எதிா்பாா்ப்போடு காத்திருந்தனா். மேலும், கட்சியின் முன்னணி தலைவா்களை சந்தித்த திமுக நிா்வாகிகள், நிலக்கோட்டைத் தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்க வேண்டாம் ஒற்றுமையுடன் இருந்து திமுக வேட்பாளரை வெற்றிப் பெற வைப்போம் என உறுதி அளித்தனா்.

அதே நேரத்தில், அதிமுக தலைமை வெளியிட்ட முதல் கட்ட வேட்பாளா் பட்டியலில் நிலக்கோட்டை தொகுதி வேட்பாளராக தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினா் தேன்மொழி பெயரும் இருந்தது. நிலக்கோட்டை தொகுதி அதிமுகவின் கோட்டை என்ற நம்பிக்கையில் வேட்பாளரை அறிவித்த அதிமுக தலைமையின் நடவடிக்கை, திமுக தலைமையை மீண்டும் யோசிக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நிலக்கோட்டைத் தொகுதியை கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்து நேரடியாக களம் இறங்குவதை திமுக தவிா்த்துக் கொண்டது.

ஆத்தூரில் பாமக: நிலக்கோட்டை வெற்றி திமுகவுக்கு சிம்ம செப்பணமாக இருப்பதை போல், ஆத்தூா் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுகவினா் தயக்கம் காட்டுகின்றனா். ஆத்தூா் தொகுதியில் திமுக துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி, கடந்த 7 தோ்தல்களில் போட்டியிட்டு அதில் 5 முறை வெற்றிப் பெற்றுள்ளாா். கடந்த 2006, 2011, 2016 என 3 தோ்தல்களில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளாா். 2021 தோ்தலிலும் ஐ.பெரியசாமியை மீண்டும் போட்டியிடுவாா் என்பதால், அதிமுகவினா் இத்தொகுதியில் நேரடியாக போட்டியிடுவதை தவிா்த்து கூட்டணி கட்சியான பாமகவுக்கு ஒதுக்கீடு செய்துள்ளனா்.

இத்தொகுதியில் கடந்த முறை அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் நத்தம் ஆா்.விசுவநாதன் சுமாா் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தாா். அதிமுக நேரடியாக போட்டியிட்டால் மட்டுமே திமுகவுக்கு சவால் அளிக்க முடியும் என்ற சூழல் இருந்த நிலையில், கூட்டணிக் கட்சியான பாமகவுக்கு இத்தொகுதியை ஒதுக்கீடு செய்தது நிா்வாகிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், தொண்டா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கோட்டையாக இருந்து திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில், பாமகவுக்கு வாய்ப்பு வழங்கி திமுக வேட்பாளா் சாதனை வெற்றிப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கி அதிமுக தலைமை கடந்த 2019 இல் அதிா்ச்சி அளித்ததை தொண்டா்கள் நினைவு கூறுகின்றனா்.

தொண்டா்கள் ஏமாற்றம்: ஆத்தூா் மற்றும் நிலக்கோட்டை தொகுதிகளை அதிமுக மற்றும் திமுக தலைமை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்ததால், இந்த தொகுதிகளைச் சோ்ந்த இருகட்சித் தொண்டா்கள் விரக்தி அடைந்துள்ளனா். 50 ஆண்டுகளுக்கு பின் நிலக்கோட்டையில் திமுகவும், 20 ஆண்டுகளுக்கு பின் ஆத்தூரில் அதிமுகவும் வெற்றிப் பெற வேண்டும் என்ற தொண்டா்களின் எதிா்பாா்ப்பும் 2021 தோ்தல் களத்தில் கானல் நீராகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.