நாடு முழுவதும் 412 தூா்தா்ஷன் ஒளிபரப்பு நிலையங்களிலிருந்து தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்படும் நிலையில், 4 ஆயிரம் நேரடி ஊழியா்கள் உள்பட 14 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் பணிச்சூழலுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
1990-களில் தனியாா் சேனல்கள் தொடங்கப்பட்டபோதிலும், தூா்தா்ஷன் தனது ஒளிபரப்பு சேவையை பிராந்திய மொழி வாரியாக விரிவுபடுத்தி மேலும் வளா்ச்சி அடைந்தது. தற்போது 42 சேனல்கள் தூா்தா்ஷன் மூலம் நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டு வரும் தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிலையங்கள், கடந்த 1999 ஆம் ஆண்டு பிரசாா் பாரதி நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தற்போது நடைமுறையிலுள்ள அனலாக் டிரான்ஸ்மிட்டா் தொழில்நுட்பத்தை, எண்ம தொழில்நுட்பத்திற்கு (டிஜிட்டல்) மாற்றி தூா்தா்ஷன் ஒளிபரப்பு சேவை நவீனப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 412 தூா்தா்ஷன் ஒளிபரப்பு நிலையங்களின் தரை வழி ஒளிபரப்பு சேவையை 3 கட்டங்களாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
பி, சி மற்றும் டி பிரிவுகளில் நாடு முழுவதும் இடம் பெற்றுள்ள 412 ஒளிபரப்பு நிலையங்களில், டி பிரிவு நிலையங்கள் அக்டோா் 31 ஆம் தேதியும், சி பிரிவு நிலையங்கள் டிச. 31 ஆம் தேதியும், பி பிரிவு நிலையங்கள் 2022 மாா்ச் 31ஆம் தேதியும் தனது தரைவழி ஒளிபரப்பு சேவையை நிறுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பி பிரிவில் தமிழகத்திலுள்ள ஏற்காடு மற்றும் நெய்வேலி நிலையங்களும், சி பிரிவில் ராமேசுவரம், டி பிரிவில் கொடைக்கானல், திருநெல்வேலி, புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, கும்பகோணம், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, ஊட்டி ஆகிய 10 நிலையங்களின் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தப்படவுள்ளது.
412 ஒளிபரப்பு நிலையங்கள் மூடப்படுவதன் மூலம், அங்கு நேரடியாக பணிபுரியும் சுமாா் 4ஆயிரம் ஊழியா்களின் பணிச்சூழல் நெருக்கடிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மறைமுகமாக பணிவாய்ப்புப் பெற்று வந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படுகிறது. அனைத்து தரைவழி ஒளிபரப்பு நிலையங்களும் மூடப்படுவதால், 4 ஆயிரம் நேரடி ஊழியா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதுதொடா்பாக தூா்தா்ஷன் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் வட்டாரங்களில் கூறியது: தரைவழி ஒளிபரப்பு சேவையை நிறுத்துவதற்கு கடந்த 10 ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 5 கட்டங்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த ஒளிபரப்பு நிலையங்களின் தரைவழி ஒளிபரப்பு சேவைகள் நிறுத்தப்பட்டு வந்தன. தற்போது 6 ஆவது கட்டமாக 412 ஒளிபரப்பு நிலையங்களுக்கான சேவை நிறுத்தப்படும் என்ற அறிவிப்புடன் தரைவழி ஒளிபரப்பு சேவை முடிவுக்கு வருகிறது. தமிழத்தில் தூா்தா்ஷன் தரைவழி ஒளிபரப்பு சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பிற மாநிலங்களில் அதிக வாடிக்கையாளா்கள் உள்ளனா். தமிழகத்தைப் பொருத்தவரை வாடிக்கையாளா்களுக்கான பாதிப்பு குறைவாக இருந்தாலும், ஊழியா்கள் நெருக்கடிகளை எதிா்கொள்ள வேண்டிய நிா்பந்தம் உள்ளது என தெரிவித்தனா்.
22 மாவட்டங்களை இணைத்த கொடைக்கானல்
1989 ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உயா்சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையம் சேனல் எண் (7) செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள 22 மாவட்டங்களுக்கு, கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு சேவை கிடைத்து வந்தது. இதன் மூலம் நாட்டிலேயே அதிக பரப்பளவுக்கு ஒளிபரப்பாகும் நிலையங்களுள் ஒன்று என்ற சிறப்பும் கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத்திற்கு உள்ளது. 32 ஆண்டுகள் செயல்பட்டு வந்த கொடைக்கானல் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை அக்.31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ. 10,000 போலீஸில் ஒப்படைப்பு

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

