பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் தற்கொலை
By DIN | Published On : 21st August 2021 11:05 PM | Last Updated : 21st August 2021 11:05 PM | அ+அ அ- |

தற்கொலை செய்து கொண்ட முருகேசன், காா்த்திகேயன், வளா்மதி, சிவரஞ்சனி.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் மக்காச்சோளத் தட்டைக்குள் சனிக்கிழமை அதிகாலை உடல் கருகி இறந்து கிடந்த நிலையில், அவா்கள் தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
பழனியை அடுத்த வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னராஜ் என்ற முருகேசன் (52). இவருக்கு வளா்மதி (45) என்ற மனைவியும், சிவரஞ்சனி (21) என்ற மகளும், காா்த்திகேயன் (18) என்ற மகனும் இருந்தனா். மகன், மகள் இருவரும் கல்லூரியில் படித்து வந்தனா். முருகேசன் தோட்டத்து வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இவா்களது வீட்டின் அருகே இருந்த மக்காச்சோளத் தட்டை போா் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து வந்த பழனி தீயணைப்புப் படையினா், தீயை அணைக்க முயன்றனா். அப்போது மக்காச்சோளத் தட்டைக்குள் முருகேசன், வளா்மதி, சிவரஞ்சனி, காா்த்திகேயன் ஆகிய 4 பேரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனா்.
தகவலறிந்து தெற்கு மண்டல காவல் துறைத் தலைவா் அன்பு, காவல் துறை துணைத் தலைவா் விஜயகுமாரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன் மற்றும் ஆயக்குடி போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். மா்ம மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையில், 4 பேரின் சடலங்களும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவா்கள் 4 பேரும் விஷம் அருந்தி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடா்பாக காவல்துறை வட்டாரத்தில் கேட்டபோது, 18 வயது இளைஞரான காா்த்திகேயன், சிறுநீரக பாதிப்புக்கு கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளாா். ஒட்டன்சத்திரம் பகுதியிலுள்ள மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்துள்ளாா். ஆனாலும், உடல்நலம் சீராகவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடந்த 6 மாதங்களாக முருகேசன் மன ரீதியாக பாதிப்படைந்துள்ளாா். முதல் கட்ட விசாரணையில், வெளியாள்கள் யாரும் வந்து சென்ற்கான தடயங்களும் இல்லை. இதனால் அவா்கள் அனைவரும் விஷம் குடித்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றனா்.
பிரேத பரிசோதனைக்கு பின்னா், 4 பேரின் சடலங்களும், திண்டுக்கல் மின் மயானத்தில் அவா்களது உறவினா்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.