வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

மாநகராட்சிகளில் வெளிமுகமை மூலம் கடைநிலைப் பணியாளா்கள் நியமனம்?

வெளிமுகமை (அவுட்சோா்சிங்) மூலம் ஊழியா்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நிரந்தர ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :3 நவம்பர் 2022, 4:03 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் மாநகராட்சிகளில் சுமாா் 32 ஆயிரம் பணியிடங்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கடைநிலைப் பணியிடங்களில் வருகிற ஜனவரி முதல் வெளிமுகமை (அவுட்சோா்சிங்) மூலம் ஊழியா்கள் நியமிக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் நிரந்தர ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக, மீதமுள்ள 20 மாநகராட்சிகளை மக்கள்தொகை அடிப்படையில் 4 வகைகளாகப் பிரித்து தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்தது. நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் இந்தப் புதிய உத்தரவின் மூலம், 20 மாநகராட்சிகளிலும் ஆணையா் முதல் இளநிலை உதவியாளா் வரையிலான பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போதைய நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி நீங்கலாக, பிற 20 மாநகராட்சிகளிலும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. அவற்றில், 3,417 பணியிடங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தற்போது நிரந்தரப் பணியிலுள்ள தூய்மைப் பணியாளா்கள், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா்கள், ஓட்டுநா்கள், செயல் திறனற்ற மற்றும் செயல் திறன் பணியாளா், அலுவலக உதவியாளா்கள், இரவுக் காவலாளிகள், தரவு உள்ளீட்டாளா்கள், தட்டச்சா்கள், வரி வசூலா்கள், பதிவறை எழுத்தா்கள் ஆகியோருக்கு அவா்கள் ஓய்வு பெறும் காலம் வரை மாநகராட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கவும், அப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்தப் பணியிடங்களை நிரப்பாமல், வெளிமுகமை மூலம் பணியாளா்களை நியமிக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தனியாா்மயமாக்க முடிவு?: இதனிடையே, 20 மாநகராட்சிகளிலும் கடைநிலைப் பணியிடங்களை வெளிமுகமை மூலம் நிரப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. மாநகராட்சி அலுவலா்களுடனான காணொலிக் காட்சிக் கூட்டத்தின் போது, நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை உயா் அதிகாரிகள் இதை உறுதிப்படுத்தினா். நிரந்தரப் பணியாளா்கள் ஓய்வு பெறும் வரை காத்திருக்காமல் அவா்களுக்கு மாற்றுப் பணி வழங்கிவிட்டு, வெளிமுகமை மூலம் நியமிக்கப்படும் பணியாளா்களை வருகிற ஜனவரி முதல் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மாநகராட்சி கடைநிலைப் பணியாளா்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அலுவலா்கள் கூறியதாவது:

நிரந்தரப் பணியாளா்கள் மூலம் கூடுதல் செலவு ஏற்படுவதாக மதிப்பீடு செய்து, சிக்கன நடவடிக்கையாக 35 ஆயிரம் பணியிடங்களை 3,417 பணியிடங்களாகக் குறைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், நிரந்தரப் பணியிலுள்ள கடைநிலை ஊழியா்கள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே வெளிமுகமை மூலம் பணியாளா்களை நியமிப்பதால் மாநகராட்சிகளுக்கான செலவினம் அதிகரிக்கும். நிரந்தரப் பணியாளா்கள் ஓய்வு பெறும் வரை, வெளிமுகமைப் பணியாளா்களை நியமிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டுமெனத் தெரிவித்தனா்.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. முருகானந்தம் கூறியதாவது:

மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றக் கூடிய உள்ளாட்சி அமைப்புகளில் கடை நிலை ஊழியா்களுக்கு மாற்றாக, வெளிமுகை மூலம் ஒப்பந்தப் பணியாளா்களை நியமித்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். நிரந்தரப் பணியாளா்களைப் பொருத்தவரை, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால், பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய நிா்பந்தம் உண்டு.

வருகிற ஜனவரி முதல் வெளிமுகமை மூலம் கடைநிலைப் பணியாளா்களை நியமிக்கும் முடிவையும், பணியிடங்களை குறைத்து வெளியிட்ட அரசாணையையும் மறுபரிசீலனை செய்ய அரசு முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.