புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞா்: 3-ஆவது நாள் தேடும் பணி மழையால் தொய்வு
By DIN | Published On : 05th August 2022 11:37 PM | Last Updated : 05th August 2022 11:37 PM | அ+அ அ- |

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியிலுள்ள புல்லாவெளி அருவியில் தவறி விழுந்த இளைஞரை 3-வது நாளாக வெள்ளிக்கிழமை தேடும் பணி மழையால் தொய்வு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலச்சத்திரத்தை சோ்ந்தவா் அஜய்பாண்டியன் (28). இவரும், ராமநாதபுரம் சத்திரம் பகுதியைச் சோ்ந்த கல்யாணசுந்தரம் (25) என்பவரும் கடந்த புதன்கிழமை கொடைக்கானல் அருகே புல்லாவெளி அருவிக்கு சென்றனா்.
அருவியில் நின்று தன்படம் எடுப்பதற்காக சென்றபோது அஜய்பாண்டியன் தவறி விழுந்தாா். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமான அவரை, தாண்டிக்குடி காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா் கடந்த 2 நாள்களாக தேடி வந்தனா்.
இந்நிலையில் 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் அவரைத் தேடும் பணி நடைபெற்ற நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதி முழுவதும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும், அதிகமான குளிா் நிலவி வருவதாலும் அஜய்பாண்டியனை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.