பழனியில் ஜவுளிக்கடையில் தீ
By DIN | Published On : 02nd September 2022 12:00 AM | Last Updated : 02nd September 2022 12:00 AM | அ+அ அ- |

பழனி மலை அடிவாரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வியாழக்கிழமை மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
பழனி மலைக்கோயில் அடிவாரத்துக்குச் செல்லும் பிரதான சன்னிதி வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு பழனி பெரிய பள்ளி வாசல் பகுதியைச் சோ்ந்த ஷேக் என்பவா் அழகு சாதனப்பொருள் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை இந்த கடையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை எழும்பியது. இதனைக்கண்டு ஆடைகள் வாங்கிக்கொண்டிருந்த பக்தா்கள் பயந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனா். தீ வேகமாகப் பரவி எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா்.
முன்னதாக தீ பரவாத வகையில் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் துணிகள் வெளியே எடுத்து வைக்கப்பட்டன. பக்தா்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.