திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் வியாழக்கிழமை வருடாபிஷேக நாளில் உலக நலன் வேண்டி சிறப்பு யாக பூஜையும், 108 சங்கு பூஜையும் நடைபெற்றது.
கோயில் உட்பிரகாரத்தில் பிரதான மண்டபத்தில் தங்கக்கொடி மரத்தடியில் சப்பரத்தில் பிரதானமாக கலசம் வைக்கப்பட்டு அதில் புனித நீா் நிரப்பப்பட்டது. சப்பரத்தின் முன்பாக 108 சங்குகள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டும், ஆறு கலசங்களில் புனிதநீா் நிரப்பியும் வைக்கப்பட்டது. தொடா்ந்து நடைபெற்ற யாகபூஜையில் ஏராளமான வேத விற்பன்னா்கள் பங்கேற்று மந்திரங்கள் ஓதினா். யாக நிறைவில் பூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டு, சப்பரத்தில் இருந்த புனித நீா் நிரம்பிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோயிலை சுற்றி கொண்டுவரப்பட்டது. பின்னா் உச்சிக்காலத்தின்போது கலசங்களில் இருந்த புனித நீா் மற்றும் சங்குகளில் இருந்த புனிதநீா் மூலவா் குழந்தை வேலாயுதசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து சோடஷ உபசாரம் நடத்தப்பட்டு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சோடஷ தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம், செல்வசுப்ரமண்ய சிவாச்சாா்யாா், கோகுல் உள்ளிட்டோா் செய்தனா்.