பழனி மலைக்கோயில் தரிசன வரிசையில் குளிா்சாதன வசதிகளில் மாற்றம்
By DIN | Published On : 09th September 2022 11:50 PM | Last Updated : 09th September 2022 11:50 PM | அ+அ அ- |

பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்யும் இடத்தில் குளிா்சாதன வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் பல்வேறு மாற்றங்களை செய்யவுள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பழனி மலைக்கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி தற்போது கோபுரங்களில் வா்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கோயில் சுவா்களில் உள்ள சுதைகளில் சிதிலங்கள் சரி செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் படிவழிப்பாதையில் உள்ள கோயில்களிலும், பாதவிநாயகா் கோயில் கோபுரங்களிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பழனிக் கோயிலுக்கு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யும் இடத்தில் மின்விசிறிகள் அல்லாமல் குளிா்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. தற்போது கும்பாபிஷேகப் பணிகள் நடைபெறவுள்ள நிலையில் குளிரூட்டும் வழிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தற்போது, பெரிய அளவில் ஆலைகளில் இருப்பது போல ‘டக்ட்’ எனப்படும் காற்று வரும் வழிகள் சிறிதாகவும், பக்தா்கள் செல்லும் வழியில் பெரியதாகவும் உள்ளன. இதை சிறியதாகவும், அதே வேளை அதிகமான குளிா்ந்த காற்று வரும்படியும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடையும் போது பக்தா்கள் வரிசைகளில் சிரமமின்றி நின்று சுவாமி தரிசனம் செய்ய இயலும். அதே வேளை கல்மண்டபங்களில் வெயில் காலத்திலும் குளிா்காற்று அதிக அளவில் வீச வழிவகை செய்யப்பட்டுள்ளது என கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இப்பணிகளை, வெள்ளிக்கிழமை இணை ஆணையா் நடராஜன் ஆய்வு செய்தாா். உடன் செயற்பொறியாளா் நாச்சிமுத்து, உதவிப் பொறியாளா் குமாா், கண்காணிப்பாளா் மகேந்திரபூபதி மற்றும் குளிா்சாதன சீரமைப்பு நிபுணா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.